வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு மைதானம் இன்றி மாணவர்கள் சிரமம்!!

544

Vipulanthaவவுனியாவில் உள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான விபுலானந்தா கல்லூரிக்கு நிரந்தர மைதானம் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குவதாக பெற்றோர்கள் சமூக நலன் விரும்பிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கல்வி வளர்ச்சியிலும் விளையாட்டு துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற இப்பாடசாலைக்கு நிரந்தரமாக மைதானம் இல்லாத காரணத்தினால் விளையாட்டு பயிற்சிகளை வேறு மைதானங்களில் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இவ்வருடம் நடைபெறவுள்ள பாடசாலை இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பயிற்சி பெறுவதற்காக யங்ஸ்ரார் மைதானத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பண்டாரிகுளத்தில் இருந்து பல தூரம் சென்றே விளையாட்டு பயிற்சிகளில் ஈடு படவேண்டியுள்ளதால் மாணவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

அத்துடன் வகுப்பு நேரங்களும் மைதானத்துக்கு செல்வதிலேயே போகின்றது. ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள மைதானத்திற்கு செல்லவே மாணவர்கள் களைத்துவிடுகிறார்கள். இதனால் விளையாட்டுப் பயிற்சிகளில் சீராக அவர்களால் ஈடுபடமுடியவில்லை.

குறித்த மைதானத்தில் மலசல கூட வசதி இல்லாத காரணத்தினால் பாடசாலை மாணவர்கள் அயலில் உள்ள வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

நிரந்தர மைதானத்தை பெற்று தருமாறு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண அமைச்சர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், ஆளுநர் என பல தரப்பட்டவர்களுக்கும் எடுத்து கூறிய போதும் இது வரை அதற்குரிய நடவடிக்கை எடுக்க வில்லை என பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வட மாகாணத்தில் இடம் பெற்ற மென்பந்து, மல்யுத்தம் போட்டிகளில் இக்கல்லூரி மாணவர்கள் முதல் இடம் பெற்றிருந்தனர். நிரந்தரமான மைதானம் இருக்குமாயின் பல விளையாட்டு துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.