வவுனியாவில் அதிக விலைக்கு அரிசி விற்பனை : சிக்கிய அரிசி ஆலை!!

723

அரிசி ஆலை..

கட்டுப்பாட்டு விலையினை மீறி அதிக விலை பொறிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த அரிசி மூடைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அதிரடியாக செயற்பட்டு முற்றுகையிட்டனர்.

அரசாங்கத்தின் உத்தரவாத விலையையும் விட கூடுதலான விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் அரிசி ஆலைகளை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையில் இன்று (22.04.2020) மதியம் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி வெளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரிசி ஆலையினை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சமயத்தில் அதிக விலை பொறிக்கப்பட்ட 400க்கு மேற்பட்ட அரிசி மூடைகளை கைப்பற்றினர்.

சம்பா அரிசி 1கிலோ 90 ரூபா கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த அரிசி ஆலையில் காணப்பட்ட 400க்கு மேற்பட்ட அரிசி மூடைகளிலும் 98 ரூபா என பொறிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி மூடையில் அதிக விலை பொறிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினால் குறித்த அரிசி ஆலை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த அரிசி ஆலை உரிமையாளருக்கு எதிரான வழக்கு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் மாதம் (05) 26ம்திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் நீதிமன்றில் சான்றுபடுத்துவதற்காக அதிக விலை அச்சிடப்பட்ட சில அரிசி மூடைகளை பாவனையாளர் அதிகார சபையினர் எடுத்துச் சென்றனர்.

மேலும் மிகுதி அரிசி மூடைகளை கட்டுப்பாட்டு விலையினை அரிசி மூடையில் மாற்றம் செய்து மக்களுக்கு விற்பனை செய்யுமாறு பாவனையாளர் அதிகார சபையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் மக்களின் நலனில் கருத்தில் கொண்டு பல வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.