கொரோனா பரவல் தீவிரம் : கொழும்பில் 21 இடங்கள் முற்றாக முடக்கம்!!

655

கொரோனா பரவல்

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொழும்பில் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கொழும்பு 14, நாகலகம் வீதி, கொழும்பு 13 கொட்டாஞ்சேனை வீதியின் 64ம் தோட்டம், கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 11 குணசிங்கபுர, வாழைத்தோட்டம் பகுதிகள், பம்பலபிட்டி – பிரிஷ்டா பிளேஸ், மருதானையின் இமாமுல் அரூஸ் மாவத்தை, ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை, நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை,

கொழும்பு 7, – சுதந்திர சதுக்கம் – 60ம் தோட்டம், ஹெவலொக் லேன், ஒருகொடவத்த – மஜீத் பிளேஸ், மீத்தோட்டமுல்லை – வெடுகொடவத்தை, பெரேரா மாவத்தை பகுதிகள், வெல்லம்பிட்டி – வெலேவத்தை, மஹபுத்துகமுவ – நவாரவத்தை, மிரிஹானை – விமலவத்த வீதி,

தெஹிவளை – றப்பர் தோட்ட வீதி, அருணாலோக்க மாவத்தை, பிலியந்தலை பகுதியின் கிராமோதய மாவத்தை, பண்னிபிட்டிய – பலனவத்த ஆகிய 21 இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதிகளான நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை, கொழும்பு 7, – சுதந்திர சதுக்கம் – 60ம் தோட்டம் ஆகிய பகுதிகளில் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிகளைச் சேர்ந்த 134 பேர் கொரோனா தொற்று குறித்த விஷேட பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மட்டக்களப்பு – புனானை தனிமைப்படுத்தல் முகாமுக்கு இன்று அனுப்பப்பட்டனர்.

நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தையில் ஏற்கனவே முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், புதிதாக இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் அயல் வீட்டுபெண் ஒருவரும், குறித்த வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்த இரட்டை பிள்ளைகளில் ஒருவருக்கும் இந்த தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த நால்வருடன் சேர்த்து கொழும்பில் புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில், கொழும்பு 7 , சுதந்திர சதுக்கம் , 60ம் தோட்டத்தில் கண்டறியப்பட்ட தொற்றாளர். ஏற்கனவே பண்டாரநாயக்க மாவத்தைக்கு சென்று திரும்பி அங்கு மறைந்திருந்த நபரின் அயல் வீட்டை சேர்ந்தவர் என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

அத்துடன் ஹெவலொக் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் மாநகர சபையில் சேவையாற்றும் ஊழியர் எனவும், அவர் ஏற்கனவே பண்டாரநாயக்க மாவத்தையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரான லொறி சாரதியுடன் ஒன்றாக கடமையாற்றியவர் எனவும் விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

இந்நிலையில், கொழும்புக்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களை கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனைகள் மக்கள் செறிந்து வாழும் கொழும்பு – தோட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.