இலங்கையில் பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 3 வீதமானவர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்!!

369

கொரோனா..

பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் மூன்று வீதமானவர்களே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் 21000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பரிசோதனைகளில் மூன்று வீதமானவர்களுக்கே தொற்று உறுதியாகியுள்ளது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதனால் இவ்வாறு நோய் தொற்றாளிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

997 கடற்படையினர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இதில் 159 பேருக்கே கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றியது உறுதியான 80 வீதமான படையினருக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படவில்லை எனவும் இதற்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியே காரணம் எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள உள்நாட்டு மருத்துவ முறைகளை பின்பற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்துள்ளனர்.

ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர முனைப்பு காட்ட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.