கொரோனா வைரஸ்..
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் இரண்டு நிமிடங்களுக்கு மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த டிசெம்பர் மாதம் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
தற்போது வரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும், 3,633,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 251,463 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில் இன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் உலகளவில் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த எட்டு மணி நேர காலப்பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு உலகளவில் சுமார் 96 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதன்படி, இரண்டு நிமிடங்களுக்கு மூவர் என்ற ரீதியில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த எட்டு மணி நேரத்தில் உலகளவில் 8,906 பேர் நோய் தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு மணி நேரத்தில் 1113 பேர் நோய் தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 100வது இடத்தில் உள்ளது. இந்தியா 15வது இடத்திலும், அவுஸ்திரேலியா 47வது இடத்திலும், நியூசிலாந்து 81வது இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.