தனது நான்கு வயது மகளை தான் கற்பிக்கும் பாடசாலையின் அதிபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவித்து ஆசிரியை ஒருவர் ஹிராதுருகோட்டே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
2010.10.03ம் திகதியன்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்து நேற்று முன்தினம் (02) குறித்த ஆசிரியை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதிபர் உள்ளிட்ட 15 பேர் அடங்கிய ஆசிரியர் குழு 2010.10.03ம் திகதியன்று பதியத்தலாவ பகுதியில் மரண வீடொன்றிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த அதிபர் தனது மகளை மடியில் அமர்த்தியதாகவும் சிறிது நேரத்தில் மகள் அழுததாகவும் ஆசிரியை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எனினும் சம்பவம் நடந்து மூன்று வருடங்களின் பின் ஆசிரியை முறைப்பாடு செய்வது குறித்து பொலிஸார் விசாரணை செய்தனர்.
குறித்த ஆசிரியை வேறு பாடசாலைக்கு இடம்மாற்றம் பெறவுள்ளதாகவும் அதிபர் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு ஆசிரியை முறைப்பாடு செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து அதிபர் நேற்று (03) கைது செய்யப்பட்டு மஹியங்கனை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமி வைத்திய பரிசோதனைக்கென மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மகளுக்கு நடந்த கொடுமை குறித்து மூன்று வருடங்களின் பின் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த ஆசிரியை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.




