வவுனியாவில் சிறுகைத்தொழில் அமைச்சின் ஊடாக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான உதவி வழங்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!

874

சிறுகைத்தொழில் அமைச்சின் ஊடாக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான உதவிகளை வழங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் ஆர்வமுள்ளவர்களை விண்ணப்பிக்குமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா மாவட்ட உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

விவசாய உற்பத்திகளுக்கான அரசின் உதவித் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுகைத்தொழில் அமைச்சினால் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் ஊடாக தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

விவசாய உற்பத்திகளை நவீன தொழில்நுட்பம் ஊடாக உற்பத்தி செய்தல், உற்பத்தி செய்யப்பட்ட விவசாய பொருட்களை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றுதல், ஏற்றுமதி சந்தையை நோக்கிய உற்பத்திகளை மேற்கொள்ளல் போன்றவற்றுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆர்வமுள்ள தனிநபர்கள், சங்கங்கள் விண்ணப்பித்து இந்த உற்பத்திகளுக்கான உவிகளைப் பெற முடியும். வடமாகாணத்திற்கான பிராந்திய காரியாலயம் இல.330, சூசைப்பிள்ளையார்குளம், வவுனியா என்ற முகவரியில் அமைந்துள்ளது. இம்மாதம் 31 ஆம் திகதி வரை அதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

பொருத்தமானவர்கள் திட்ட வரைபுகளை தயாரித்து வழங்க முடியும். குறிப்பாக 30 மில்லியன் வரையில் திட்ட வரைபுகளை தயாரித்தால் அதில் அரைவாசியை அரசாங்கம் நன்கொடையாக வழங்கும்.

நூற்றுக்கு 40 வீதத்தை வங்கிகளில் இலகு கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் 10 வீதத்தை தனிநபர்கள் அல்லது சங்கங்கள் முதலிட தயாராக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் வடமாகாணத்தில் இந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தொகை குறைவாக உள்ளது. எனவே இம்முறை இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து உற்பத்திகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.