போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி திருப்திகரமாக நடந்து வருவதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 31.12.2013 அன்றைய கால கட்டத்திற்குள் இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்காக 10,250 வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்து விட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதே திட்டத்தின் கீழ் மேலும் 27,750 வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், இதற்கான நிதியுதவி நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசின் நிதியுதவியுடன் 5 ஆயிரம் வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் 4 ஆயிரம் வீடுகள் இலங்கையின் மத்திய மத்திய மற்றும் ஊவா மாகாணப் பகுதிகளில் கட்டித் தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் 50 ஆயிரம் வீடுகளை கட்டுதல் அல்லது புனரமைத்தல் பணி திருப்திகரமாக நடைபெற்று வருவதாக சிதம்பரம் கூறியுள்ளார்.





