அனாமிகா படம் விரைவில் வெளியாகிறது. ஹிந்தி கஹானியின் ரிமேக்கான இதில் நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவின் பிடிவாதத்தை மறைக்க இயக்குனர் சேகர் கம்மூலா சொல்லும் விளக்கம்தான் இப்போதைய சிரிப்பு வெடி.
கஹானியில் வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்திருந்தார். கொல்கத்தா வந்த தனது கணவன் காணாமல் போக, அவரைத் தேடி வெளிநாட்டிலிருந்து கொல்கத்தா வரும் வித்யாபாலன் சந்திக்கும் எதிர்பாராத நிகழ்வுகளும், வித்யாபாலன் யார் என்ற கேள்விக்குமான விடையும்தான் படம்.
வித்யாபாலனின் கர்ப்பிணி வேடம் படத்தின் பிரதானம். அது ரசிகர்களின் சிம்பதியை பெறுவதற்காக உருவாக்கிய கர்ப்பம் கிடையாது. படத்தின் டுவிஸ்டுடன் சம்பந்தப்பட்டது.
கஹானியை தமிழ், தெலுங்கில் ரிமேக் செய்வது என்று முடிவாகி நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்ட போது கர்ப்பிணியாக நடிக்க மறுத்தார். இயக்குனர் சேகர் கம்மூலா வற்புறுத்தியும் அவர் மசியவில்லை. பிறகு வேறு வழியின்றி நயன்தாரா சொன்னதுக்கு ஏற்ப திரைக்கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டது. படம் வெளியாகயிருக்கிற நிலையில் நயன்தாராவின் பிடிவாதத்துக்கு வேறொரு விளக்கம் தந்துள்ளார் சேகர் கம்மூலா.
கர்ப்பிணியாக நடித்தால் எளிதாக ரசிகர்களின் சிம்பதியை பெற்றுவிடலாம். கர்ப்பிணியாக இல்லாமல் அந்த சிம்பதியை பெறுவதுதான் சவால் என்று நயன்தாரா சொன்னதாகவும், அதனால் அதற்கேற்ப திரைக்கதையை மாற்றி எழுதியதாகவும், வித்யாபாலனைவிட நயன்தாரா பெட்டராக செய்திருக்கிறார் எனவும் சேகர் கம்மூலா தெரிவித்துள்ளார்.
அவர் செய்திருக்கும் மாற்றம் படத்துக்கு சிறப்பு செய்திருக்கிறதா இல்லையா என்பது படம் வெளியானதும் தெரிந்துவிடப் போகிறது.





