கொரோனா..
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 523 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 970 ஆக உயர்ந்துள்ளது.
இந்த 964 தொற்றாளர்களில் 523 பேர் கடற்படையை சேர்ந்தவர்களாவர். இன்றிரவு 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 33 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று மற்றும் 18 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் இருந்து 7 பேரும், ஹோமாகம வைத்தியசாலையில் இருந்து 7 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து ( முல்லேரியா வைத்தியசாலை ) மூவரும், இரணமடு வைத்தியசாலையில் இருந்து ஒருவரும் இவ்வாறு பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
அதன்படி இதுவரை 538 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் , அவர்களில் 183 பேர் கடற்படை வீரர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. 413 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள்,
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் கடந்த சில நாட்களாக கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதும் நேற்றைய தொற்று நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் பிரகாரம் குறிப்பிடத்தக்க அளவு அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி 209 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.