தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்..
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்ப்படவுள்ள நிலையில் நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவில்,
தற்போதைய கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீண்டகாலமாக அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை முதன்முறையாக நாளை முதல் தளர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை இல்லாதொழிப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு நான் உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கடைகளில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் மேலும், சுகாதார விதிமுறைகளில் தொற்று நீக்கி, முகக்கவசங்கள், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் தனிமனித இடைவெளி பேணுதல் என்பன அடங்கும்.
அத்துடன் நாளை முதல் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவானது இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மாத்திரம் அமுல்படுத்தப்படவுள்ளது. பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையையும், ஒவ்வொரு நிறுவன சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானிப்பார்கள்.
கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் நாளை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற போதும் மக்கள் அதிகமாக கூடும் விருந்தகங்கள், திரையரங்குகள் மற்றும் ஏனைய இடங்கள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது போக்குவரத்துகளில் சமூக இடைவெளிக்கு ஏற்பவே பயணிகள் ஏற்றப்படுவர். முச்சக்கரவண்டிகளில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணம் செய்யலாம்.
பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைப்பொருள் விற்பனையகங்களில் ஒரு மீற்றர் இடைவெளியில் வரிசையில் நின்றே பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
முடிதிருத்தம் நிலையங்கள் சுகாதார ஒழுங்குவிதிகளின் அடிப்படையிலேயே இயங்கும்.
இதேவேளை தேசிய அடையாள அட்டைகளின் இலக்கங்களுக்கு ஏற்ப வெளியில் செல்லும் நடைமுறை நாளையுடன் முடிவுக்கு வருகிறது. எவரும் எல்லா நாட்களிலும் வெளியில் சென்று அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.