கனிமொழி பற்றிய சி.டி தகவல்கள் அனைத்தும் பொய் : தி.மு.க!!

928

kanimoli2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கனிமொழி எம்.பி. பேசியதாக கூறப்படும் ஒரு சி.டி. பதிவை ஆம்ஆத்மி தலைவர் பிரசாந்த் பூஷன் வெளியிட்டார். அது 2ஜி வழக்கில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனிமொழி உரையாடல் உள்ளதாக கூறப்படும் அந்த சி.டி. தகவல்கள் அனைத்தும் பொய் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரை முருகன், ஆம்ஆத்மி வெளியிட்ட சி.டி. போலியாக தயாரிக்கப்பட்டது என்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

ஆம்ஆத்மி தலைவர் பிரசாந்த் பூஷன் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக ஒரு உரையாடல் சி.டி. பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்கு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தி.மு.க.வின் வெற்றியையும், புகழையும் கெடுக்கும் தீய எண்ணத்துடன் அந்த சி.டி. பதிவு உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க.வின் எதிரிகள் இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.



அந்த சி.டி. பதிவு உரையாடல் முழுக்க முழுக்க பொய்யானது. வேறு, வேறு பேச்சுக்களை ஒட்டி அந்த சி.டி.யை தயாரித்துள்ளனர். இத்தகைய சதி செயல் மூலம் அரசியல் களத்தில் தி.மு.க.வை விரட்ட நெருக்கடி கொடுக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

டி.ஆர்.பாலு எம்.பி. இது தொடர்பாக கூறியதாவது..

பிரசாந்த் பூஷன் போன்ற ஒரு பிரபல வக்கீல், ஒரு சி.டி. பதிவில் என்ன உள்ளது என்பதை அறியாமலே அதை ஊடகங்களுக்கு கொண்டு சென்றிருப்பது ஆச்சரியமாக உள்ளது. முதலில் அவர் நீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டும்.

ஊடகங்களிடம் அவர் அந்த சி.டி. பதிவை வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது, இதன் மூலம் கனிமொழி குரலை வைத்து சி.டி. தயாரித்து வெளியிட்டிருப்பதில் ஏதோ ஒரு அரசியல் உள்நோக்கம் இருப்பது தெரிகிறது.

தி.மு.க.வின் கூட்டணி முயற்சியை சீர்குலைக்க இப்படி ஒரு சி.டி. வெளியிடப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். எங்கள் தலைவரை யாராலும், எந்த கட்சியாலும் நெருக்கடிக்குள் தள்ளவே முடியாது.

ஏனெனில் எங்கள் தலைவர் கலைஞர் அவ்வளவு எளிதில் சாய்க்க முடியாத பெரியார் கொள்கை வழியில் வந்தவராவார். இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார்.