உலக சுற்று சூழல் தினமான ஜூன் 5ம் திகதி தொடக்கம் வட மாகாணத்தில் 20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன் பாவனையை தடைசெய்வதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இன்று (06) காலை 9.30 மணியளவில் நடைபெற்ற பொலித்தீன் பாவனையினை தடைசெய்வது தொடர்பாக கலந்துரையாடலின் போதே விவசாய அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..
உலக சுற்று சூழல் தினமான ஜூன் 5 ஆம் திகதியில் இருந்து வட மாகாணத்தில் 20 மைக்ரோனும், அதற்குக் குறைவான பொலித்தீனை பாவனைக்கு உட்படுத்துவது, காட்சிப்படுத்துவது, விற்பனை செய்வது முற்றுமுழுதாக தடைசெய்யப்படும்.
இவ்வறிவித்தலினை மீறுபவர்கள் மீது இலங்கை அரசாங்கத்தின் சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான முழுமையான விழிப்புணர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கு வழங்க வேண்டும்.
அதன்பின் இச்சட்டத்தினை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஜூன் 5ம் திகதிக்கு பின்னர் 20 மைக்ரோன் பொலித்தீன் பாவனை தடைசெய்யப்படுகின்ற அதே வேளையில் ஏனைய பிளாஸ்ரிக் பாவனை பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களினை தேடிக் கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மத்திய சுற்றாடல் அதிகார சபை, வட மாகாண சுற்றாடல் அமைச்சு, வணிகர் சங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.