புற்றுநோயாளர்களுக்காக அழகிய கூந்தலை தானம் செய்த மாணவிகள்!!

714

Hairபுற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் விக் எனப்படும் செயற்கை முடி வாங்க இயலாதவர்களுக்கு உதவிடும் வகையில் தங்களது கூந்தலை தானமாக அளித்துள்ளனர் சென்னை கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர்.

ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி கூந்தல் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். காரணம் முக வசீகரத்தை கூட்டிக் காட்டுவதில் முடியின் பங்கு அதிகம் என்பதால் தான்.

சமீபத்தில் வடமாநிலத்தில் தலையில் முடி இல்லை என மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேள்விப்பட்டிருக்கலாம்.

ஆனால் விதியின் சதியால் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவோர் தலையில் முடியை இழக்கின்றனர். அத்தகையோருக்கு விக் செய்து தருவதற்காக தங்களது கூந்தலை தானமாக அளித்துள்ளனர் சென்னையில் உள்ள கல்லூரி மாணவிகள்.



கடந்த செவ்வாயன்று சர்வதேச புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. எனவே, புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்டியன் கல்லூரி மாணவிகள் தங்கள் கூந்தலை தானமாக அளித்துள்ளனர்.

இது குறித்து 13 இன்ச் கூந்தலைத் தானமாக அளித்த ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி ரென்னி கூறுகையில், பொதுவாக விக்குகள் 10 ஆயிரத்திலிருந்து 26 ஆயிரம் வரை கூட விற்கப்படுகின்றன. வறுமை நிலையில் வாழும் கூந்தலை இழந்த புற்றுந்நோய் பாதிப்படைந்தவர்கள் தங்கள் மருத்துவச் செலவுக்கே அல்லாடும் போது, இது போன்ற செலவுகளுக்கு என்ன செய்வார்கள்.

அதனால் தான் நான் எனது கூந்தலைத் தானமாக அளித்துள்ளேன். மற்றப் பெண்களும் இது போன்று தானமாக அளிக்க முன்வர வேண்டும் என நான் விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தலையில் முடி இல்லாததால் குறிப்பாக குழந்தைகள் தன்னம்பிக்கை இழந்து விடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய விழிப்புணார்வு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள் இவர்கள். ஏற்கனவே நோய்த் தாக்குதலாலும், அதற்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சைகளாலும் உடல் வலியை அனுபவிக்கும் குழந்தைகள், முடியையும் இழப்பதால் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர் வி. சுரேந்தர்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவி தனது முழுக் கூந்தலையும் அளித்து மொட்டை போட்டுக் கொண்டார். மேலும், சில மாணவிகள் தங்களது நீளக் கூந்தலை தானம் அளித்து விட்டு ஆண்கள் போன்ற ஹேர்ஸ்டைலுக்கு மாறினார்கள்.

கிட்டத்தட்ட ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என நூறுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கூந்தல் தானம் செய்தனர். மேலும் 200 பேர் தானம் செய்வதற்காக பதிவு செய்துள்ளனராம்.

தனியார் முடி திருத்தும் நிலையம் இலவசமாக இந்த கூந்தல் தான நிகழ்ச்சிக்கு உதவியது. இதன் மூலம் சேகரிக்கப்பட்ட முடிகள் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் வசம் ஒப்படைக்கப்பட்டது. இவற்றைக் கொண்டு சுமார் நூறு விக்குகள் தயாரிக்கலாம் எனத் தெரிகிறது.