இலங்கை தமிழரின் கருணை : கொழும்பில் 70 நாட்களாக சிக்கியிருக்கும் கேரள தம்பதி!!

1936

கேரள தம்பதி…

விடுமுறை நாட்களை மனைவியுடன் இலங்கையில் கழிக்க சென்ற இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் கடந்த 70 நாட்களாக கொழும்பில் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் வைப்பின் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித். கப்பல் ஊழியரான இவர் விடுமுறை நாட்களை இலங்கையில் செலவிடலாம் என முடிவெடுத்து மனைவியுடன் கடந்த மார்ச் 11 அன்று கொழும்பு சென்றுள்ளார்.

இதனிடையே கொரோனா பரவல், ஊரடங்கு என கடும் நெருக்கடியை எதிர்கொண்ட இந்த தம்பதி மார்ச் 19 முதல் கேரளாவுக்கு திரும்ப முயன்று வருகின்றனர். ஊரடங்கால் உள்ளூர் விமான சேவைகள் மொத்தம் முடக்கப்பட்டுள்ளதால் செய்வதறியாது தவித்துள்ளனர்.

இவர்கள் இலங்கை தமிழர் ஒருவரின் ஹொட்டலில் தங்கியிருப்பதால், அவரது கருணையால் இதுவரை உணவுக்கும் தங்குவதற்கும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் மார்ச் 25 முதல் அந்த ஹொட்டல் மூடப்பட்டாலும், தற்போது இவர்கள் மட்டுமே அந்த ஹொட்டலில் தங்கி வருகின்றனர். சமையற் கலைஞர் உட்ப சில ஊழியர்கள் மட்டுமே அந்த ஹொட்டலில் தற்போது உள்ளனர்.

மேலும், ஊரடங்கு காரணமாக ஹொட்டலில் இருந்து வெளியேற முடியாமல் ஸ்ரீஜித்தும் மனைவியும் முடங்கிப்போயுள்ளனர். கேரள மாநிலத்தவர்கள் சுமார் 80 பேர் வரை இலங்கையில் கொரோனாவால் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தால் எவ்வித பயனும் இல்லை என்றே ஸ்ரீஜித் குற்றஞ்சாட்டுகிறார். கேரள சுற்றுலாத்துறைக்கும், அமைச்சருக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக கூறும் ஸ்ரீஜித், மத்திய அமைச்சர் வி.முரளிதரன் அடுத்தமுறை பார்க்கலாம் என மட்டும் தெரிவித்ததாக குறிப்பிடுகிறார்.

இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு நாட்டில் பல மாதங்களாக சிக்கியிருக்கிறோம், ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த உதவியும் இல்லை. இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜூன் 1 ஆம் திகதி கொழும்பில் இருந்து திருச்சிக்கு கப்பல் சேவை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முன்னெடுக்கப்படுகிறது. அதில் இடம் கிடைக்கும் என்பது சந்தேகமே என்கிறார் ஸ்ரீஜித்.