சீனாவின் ஒரு பகுதியாக விளங்கும் ஹாங்காங்கின் ஹேப்பி பள்ளத்தாக்கு மாவட்டத்தில் கட்டுமானப்பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு தொன் எடையுடைய வெடிக்கப்படாத ஒரு அமெரிக்க குண்டு பூமிக்கடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குண்டுகள் செயல் இழக்க செய்யும் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குண்டுகள் அகற்றும் நிபுணர்கள் அப்பகுதி வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் இருந்த 2260 பேரை பத்திரமான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். பின்னர் அப்பகுதி சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது.
இதையடுத்து அந்த குண்டும் மற்ற வெடிக்கப்படாத பிரிட்டனின் குண்டுகளும் செயலிழக்கம் செய்யப்பட்டு அகற்றப்பட்டன. தற்செயலாக இது வெடிக்குமானால், இப்பகுதியில் உள்ள வீடுகள் தரைமட்டமாகி மிகப்பெரிய சேதங்களை விளைவித்து இருக்கும் என்று அப்போது ஒரு அதிகாரி கூறினார்.
கடந்த 1941ம் ஆண்டு ஹாங்காங் பிரிட்டன் நிர்வாகத்தில் இருந்தபோது ஜப்பான் அப்பகுதிகளுக்குள் ஊடுருவியது. அப்போது ஜப்பான் படைக்கு எதிராக அமெரிக்கா வீசிய குண்டுதான் பூமிக்கடியில் வெடிக்காமல் அப்படியே கிடந்தது என்று கூறப்படுகிறது.