வரலாற்றில் மிகப் பெரிய அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கை!!

731

அந்நிய செலாவணி நெருக்கடி..

சுற்றுலா, ஆடை உற்பத்தி தொழிற்துறைகள் மற்றும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் ஆகிய தரப்பின் மூலமே இலங்கைக்கு வெளிநாட்டு அந்திய செலாவணி அதிகளவில் கிடைத்து வருகின்றது. எனினும் கொரோனா வைரஸ் என்ற உலக தொற்று நோய் காரணமாக இந்த பிரதான வருமான வழிகள் அடைப்பட்டுள்ளன.

அத்துடன் நாட்டிற்குள் உற்பத்தி மற்றும் சேவைகளும் முடங்கியுள்ளன. தேயிலை உட்பட ஏற்றுமதி உற்பத்திகளில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது போயுள்ளது.

குறிப்பாக இலங்கையில் ஏற்றுமதி பொருட்களுக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கிடைக்காமல் போயுள்ளன. மேலும் உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களை சீனா உள்ளிட்ட நாடுகளில் இரந்து இறக்குமதி செய்யவும் முடியாமல் போயுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாத ஏற்றுமதி வருமானமானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, ஆயிரத்து 5 மில்லியன் டொலர்களாக அதாவது 3.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது இலங்கை மத்திய வங்கி ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள பொருளாதாரம் தொடர்பான அறிக்கையில் கூறியுள்ளது.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாத ஏற்றுமதிக்கான செலவுகள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது ஆயிரத்து 735 மில்லியன் டொலர்களாக அதாவது 4.8 வீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டின் பிரதான வருமான வழிகள் அடைப்பட்டுள்ள பின்னணியில் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், அத்தியவசிய நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லல் என்பவற்றுடன் இந்த வருடம் பெருந்தொகை கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபர திணைக்களம் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய இலங்கையில் மொத்த கடன் 12.89 ட்ரில்லியன் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் 6.5 ட்ரில்லியன் ரூபாய் தேசிய ரீதியாக பெற்றுக்கொண்ட கடன் என்பதுடன் 6.39 ட்ரில்லியன் ரூபாய் வெளிநாட்டு கடனாகும்.

இந்த நிலையில் இவ்வருடம் செலுத்த வேண்டிய கடனுக்காக நிவாரண காலத்தை பெற்றுக்கொள்வது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருவதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கையின் வரலாற்றிலேயே மிகப் பெரிய அந்நிய செலாவணி நெருக்கடியை நாடு எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வெளிநாட்டு அந்திய செலாவணி நெருக்கடி காரணமாக இறக்குமதியை வரையறுக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியதாகவும் அவர் கூறியிருந்தார்.

நாட்டின் பிரதான வருமான வழியான சுற்றுலாத் தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால்,நாட்டுக்குள் அந்நிய செலாவணி வருவது குறைந்துள்ளது எனவும் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

-தமிழ்வின்-