மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் : வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

281

Sathiyalingamவடமாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் ஒன்றியத்துடனான கலந்துரையாடல் சுகாதார அமைச்சின் வவுனியா உப அலுவலகத்தில் புதன்கிழமை (05) நடைபெற்றது. இதன்போது, வடமாகாணத்தில் வலுவிழந்தோர் தொடர்பாக சுகாதார அமைச்சினால் எடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகாணத்தில் விசேட தேவைக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும். இதற்குக் காரணம் 03 தசாப்த யுத்தமாகும். இந்த நிலையில், இவர்களுக்கான விசேட தேவைகளை இனங்கண்டு அவற்றை பூர்த்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு இந்த மாகாணசபைக்குள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்போது ஒன்றியத்தின் சார்பில் பின்வரும் கோரிக்கைகள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் தனது கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
அவையாவன,

வடமாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும். அத்துடன், அவர்களுக்கான விசேட மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விசேட அடையாள அட்டை வழங்கப்படல் வேண்டும்.

சகல வைத்தியசாலைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு சிகிச்சையில் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்
மாற்றுதிறனாளிகளுக்கான விசேட அணுகும் வசதிகள் வைத்தியசாலைகளில் மேம்படுத்த படல் வேண்டும்.

மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் சத்துணவுவழங்கப்படல் வேண்டும்.

இச்சந்திப்பில் வட மாகாணத்தில் பணியாற்றும் பத்திற்கும் மேற்ப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கான நிறுவனங்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்