இரண்டாவது கொரோனா வைரஸ் அலைக்கு வாய்ப்பு இல்லை : பாதுகாப்புச் செயலாளர்!!

621

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“எமது பாதுகாப்பு படைகள், பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு நன்றி தான் தெரிவிப்பதாகவும் கடந்த 40 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட சமூகத்திலிருந்து பதிவாகவில்லை.

இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில் நாம் வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு பயனுள்ள பொறிமுறையைப் பயன்படுத்தியுள்ளோம்.

எமது படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து எதிர்காலத்திலும் தொடர்ந்து அதே வழிமுறையைப் முன்னெடுக்கவுள்ளனர்.

எனவே, நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என நான் நம்புகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

ஒருவேளை இரண்டாவது அலை அச்சுறுத்தல் ஏற்பட்டாலும், இராணுவம், பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை திறம்பட எதிர்கொள்வார்கள்.