மூன்று மணி நேர சூரிய கிரகணம் : தவறியேனும் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தல்!!

24041

சூரிய கிரகணம்..

சூரிய கிரகணமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்று மணித்தியாலங்கள் வரையில் நீடிக்கவுள்ள நிலையில் குறித்த நேரத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ மயூரக்குருக்கள் குறிப்பிட்டுள்ளார். எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் கூறுகையில்,

இலங்கையில் எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சூரியகிரகணம் தென்படுகிறது. இலங்கையில் காலை 10.22 மணி முதல் பகல் 1.30 மணி வரையான காலப்பகுதியில் இந்த சூரிய கிரகணத்தினை நாம் அவதானிக்க முடியும்.

இக்காலப்பகுதியிலே தெளிவாக தெரிவதுடன் இலங்கையில் வாழும் மக்கள் இதனை பார்க்க முடியும். சூரிய கிரகணத்தினை நாம் வெற்றுக் கண்ணினால் பார்க்ககூடாது.

சூரிய கிரகணத்தினை பார்க்க வேண்டுமாயின் துணியினை நீரில் நனைத்து அதன் ஊடாக சூரியனை நாம் பார்க்கலாம் அல்லது கண்ணாடி கொண்டோ அல்லது நீர் நிலைகளினூடாகவோ பார்க்க முடியும்.

வெற்றுக்கண்ணால் பார்ப்பதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் காலப்பகுதிகளில் கர்ப்பிணிகளாக இருக்கின்ற பெண்கள் வெளியில் திரிவதனையோ அல்லது கிரகண காலத்தில் சூரியனை பார்ப்பதனையோ தவிர்த்து கொள்ளுங்கள்.

கிரகண காலத்தில் சூரியனில் இருந்து வெளியேறுகின்ற புறவூதாக் கதிர்களின் தாக்கம் அவர்களை இலகுவில் தாக்கும் தன்மை கொண்டவை. அதனாலே தான் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெளியில் வரக்கூடாது எனக் கூறப்படுகிறது.

இந்தக் காலப்பகுதிகளில் உணவுகள் சமைப்பதனையோ, உணவுகளை உட்கொள்வதனையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சமைத்த உணவுகள் இருந்தால் அவற்றை தர்ப்பை புல் கொண்டு மூடிவைத்து கொள்ளுங்கள். கிரகண காலம் முடிந்ததும் அவற்றை எடுத்து விட்டு உணவுகளை உட்கொள்ளலாம் அல்லது கிரகண காலம் முடிந்ததும் சமைத்து உண்ணலாம்.

ஆலயங்கள் கிரகண காலத்தின் முன்னர் பூஜைகள் முடிக்கப்பட்டு மூடப்படும். கிரகணகாலம் முடிந்ததும் பிராயச்சித்தம் செய்யப்பட்டு பூஜைகளுக்காக திறக்கப்படும்.

இக்காலத்தில் நீர்நிலைகளில் வழிபாடுகள் செய்தல் நன்மை பயக்கும். தர்பணங்கள் மற்றும் பாராயணங்கள் செய்வதால் பலமடங்கு பலனைத்தரும். எனவே அனைவரும் இவற்றைக்கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.