நடிகர் சிம்பு பெயரில் இணையத்தில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக சிம்பு அறிவித்துள்ளார்.
நடிகர்கள், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி கணக்குகளை மர்ம நபர்கள் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றிய செய்தி மற்றும் படங்களை அதில் போட்டு வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்தும் உரையாடுகிறார்கள்
ஏற்கனவே திரிஷா பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டது. இதனை அவர் கண்டித்தார். சமீபத்தில் காமெடி நடிகர்கள் பரோட்டா சூரி, வி.டி.வி கணேஷ் பெயரிலும் மோசடி நடந்தது. தற்போது சிம்பு பெயரில் நடக்கிறது. இதுகுறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..
நான் டுவிட்டரில் இருக்கிறேன். ஐ அம் எஸ்டிஆர் என்ற பெயரில் என் அதிகாரபூர்வ கணக்கு உள்ளது. ஆனால் என் பெயரில் சில போலி டுவிட்டர் கணக்குகளும் இருக்கின்றன. ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் இந்த போலியை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என்னைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் எனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் உடனுக்குடன் போட்டு வருகிறேன். என் பெயரில் உள்ள போலி கணக்குகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.