வவுனியா பல்கலைக்கழக விடயங்களை கையாள தனியாக உறுப்பினர் நியமனம்!!

732

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பரிந்துரைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா வளாகம் தற்போது வரையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குரியதாகும். இந்நிலையில் அதனை தனியான பல்கலைக்கழகமாக மாற்றும் போது அங்கிருக்கும் சொத்துக்கள் யாவும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இருந்து பிரிக்கப்படல் வேண்டும்.

அத்துடன் கல்வி, கல்விசாரா ஊழியர்கள் இந்த பிரிப்பின் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலா அல்லது வவுனியா பல்கலைக் கழகத்திலா பணியாற்றுவது என்பது தொடர்பில் ஒப்புதல் பெறுதல் ஆகிய விடயங்கள் ஆராயப்பட வேண்டும்.

அத்தோடு மிக முக்கியமாக தற்போது வரையில் கல்வி பயிலும் மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறும் வரையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சான்றிதழைப் பெறும் வகையில் நடைமுறைகள் பேணப்பட வேண்டும்.

2020 ஆம் ஆண்டு இணைக்கும் மாணவர்கள் எந்தப் பல்கலைக் கழகத்தின் பட்டியல்களின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற பரிந்துரைகளை முன் வைக்கும் நோக்கிலேயே உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தற்போது பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான செல்வி வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.