நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா : சீனாவில் பாடசாலைகளும் 1255 விமான சேவைகளும் ரத்து!!

870

மீண்டும் கொரோனா..

பெண் ஆட்சி நடாத்தியதால் நியூசிலாந்தில் கொரோனா கட்டுக்குள் வந்தது என சர்வதேச ஊடகங்கள் மார்தட்டிக்கொண்டது யாவரும் அறிந்ததே. ஆனாலும் கொரோனா விட்டுப்போவதாக இல்லை போலும். மீண்டும் 24 நாட்களுக்கு பின்னர் நியூஸிலாந்து நாட்டில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து நாட்டில் பிப்ரவரி 26 அன்று முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அன்றிலிருந்து தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார் அந்நாட்டுப் பிரதமர் ஜெஸிந்தா. மார்ச் 19 க்குள் அதன் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு மார்ச் 26 முதல் முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

மொத்தம் அந்நாட்டில் இதுவரை நோய்ப் பாதித்தோருடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் 2,67,435 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், NZ COVID Tracer என்ற செயலியின் மூலம் மக்களின் ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தொற்று மெல்ல கட்டுப்பாட்டிற்குள் வந்து கடந்த மாதம் அந்நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பினார்.

இதனையடுத்து கொரோனா பாதிப்பு இல்லாத தேசமாக மாறியது நியூஸிலாந்து. அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்புநிலை மெல்ல திரும்பியது.

இந்த சூழலில் 24 நாட்களுக்கு பின்னர் அங்கு புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் பிரித்தானியாவுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் சீனாவின் வுஹான் நகரில் 2019ம் ஆண்டு இறுதிப் பகுதியில் முதன்முதலில் கொரோனா பரவிய நிலையில் அது உலகம் முழுவதும் பரவிய பின்னர் வுஹானில் கட்டுப்படுத்தப்பட்டது.

இப்போது இரண்டாவது அலையாகத் தலைநகர் பிஜிங்கில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ளமை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் எண்ணாயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நாளின் காலை நிலவரப்படி பீஜிங்கில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பீஜிங்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாடசாலைகள் அனைத்தையும் மூடியுள்ளதுடன், 1255 விமானங்களையும் சீனா ரத்து செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.