தமிழக முகாமில் உள்ள 60 இலங்கை அகதிகள் ஆஸி. தப்பிச்செல்ல முயற்சி?

853

refugee

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தோகை மலைநல்லூர் கிராமம், வேலூர் மாவட்டம் வாலஜாப்பேட்டை, குடியாத்தம், காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப் பூண்டி போன்ற பல்வேறு இடங்களில் அகதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள்.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழர்கள் பலர் அந்நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறி தமிழக முகாம்களில் குடியேறி உள்ளனர். இந்த முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் அடிக்கடி வெளிநாடுகளில் தஞ்சம் புகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

முகாம்களில் இருந்து தப்பிச்சென்று விசைப்படகுகள் மூலமாக கடலிலேயே பயணம் செய்து அவுஸ்திரேலியா நாட்டில் தஞ்சம் அடைகின்றனர்.

முகாம்களில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயற்சிக்கும் இலங்கை அகதிகளுக்கு உதவ பல முகவர்கள் உள்ளனர். முகவர்களிடம் இலங்கை அகதிகள் பல லட்சம் பணம் கொடுத்து அவுஸ்திரேலியா நாட்டுக்கு செல்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 6ந் திகதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரே விசைப்படகில் தப்பிச்செல்ல முயன்ற 120 பேரை கடற்படையினர் பிடித்தனர். அவர்கள் கோர்ட்டு நடவடிக்கைகளுக்குப் பின் மீண்டும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் 60 பேர் விசைப்படகு மூலம் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல இருப்பதாக கியூ பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் கியூ பிரிவு பொலிசார் நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது நாகை கீச்சாங்குப்பம் பகுதியில் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிதாக இருந்த மர்ம படகு ஒன்றை பொலிசார் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அந்த படகில் தான் அகதிகள் அவுஸ்திரேலியா நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றிருக்கலாம் என்று பொலிசாருக்கு சந்தேகம் எழுந்ததால், படகு உரிமையாளர் குறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதுபற்றி பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தமிழக முகாம்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 60 பேர் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்து. இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் நாகையில் ஒரு விசைப்படகு சிக்கி உள்ளது.

அந்த படகு செருதூர் மீனவகிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் படகு என்பது தெரியவருகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதற்கு தரகராக வேலை பார்த்த சென்னை, மதுரை ஆகிய இடங்களைச் சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு பொலிசார் கூறினர்.

நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஆபரேசன் ஆம்லா ஒத்திகை நடைபெற்றது. இதில் பொலிசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த கண்காணிப்பு பணியின்போது தான் தமிழக முகாம்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா தப்பிச்செல்ல முயன்ற தகவல் கிடைத்ததாக பொலிசார் கூறினர்.