தூத்துக்குடி அருகே காதலில் ஈடுபட்ட ஏரலை சேர்ந்த வாலிபரை, பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்தனர். அவர்களில் இருவர் செங்கோட்டை நீதிமன்றிலும்,. மற்றொருவர் பொலிசிலும் சரணடைந்தார்.
ஏரலை சேர்ந்த கணேசன் மகன் ஸ்ரீராம்(20). ஆழ்வார் கற்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகள் சோனியா(19). இவர் பாளையங்கோட்டை கல்லூரியில் 2 ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். ஸ்ரீராம் திருவிழாவிற்காக ஆழ்வார் கற்குளத்தில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றபோது சோனியாவுடன் காதல் ஏற்பட்டது.
ஆனால் இருவருக்கும் அண்ணன், தங்கை உறவுமுறை இருந்துள்ளது. இந்த தகாத காதலுக்கு இசக்கிமுத்து எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 2013 ஆக. 2ல், சோனியாவும், ஸ்ரீராமும் தலைமறைவாகினர். இசக்கி முத்து ஸ்ரீவைகுண்டம் பாலிசில், தனது மகள் சோனியாவை கடத்தியதாக, ஸ்ரீராம், அவரது அக்கா செல்வி, அக்கா கணவர் சிவா மேலும் மதுரையில் குடியிருந்து வந்த மூவர் மீது புகார் செய்தார்.
இந்நிலையில், இசக்கி முத்து 2013 செப்., 2 ல் மதுரை நீதிமன்ற கிளையில் சோனியாவை ஆஜர்படுத்தக்கோரி ஹேபியஸ் கார்பஸ்´ மனு தாக்கல் செய்தார். மறுநாள் சென்னை ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஸ்ரீராமும், சோனியாவும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் செப். 25ல் பொலிசார் இருவரையும் மதுரை நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
அங்கு சோனியா தனது தந்தை இசக்கிமுத்துவுடன் செல்வதாக கூறியதால் அவருடன் அனுப்பி வைக்கப்பட்டார். ஸ்ரீராம் மதுரையில் உள்ள அக்கா செல்வி வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பிறகும் சோனியா, ஸ்ரீராம் தொடர்பு நீடித்தது.
இதையறிந்த இசக்கிமுத்து ஸ்ரீராமிடம் திருமணம் செய்து வைப்பதாக கூறி ஆழ்வார் கற்குளம் வரும்படி அழைத்தார். இது குறித்து தனது அக்கா செல்வியிடம் தெரிவித்து விட்டு, ஸ்ரீராம் ஆழ்வார் கற்குளம் சென்றார். அதன்பின் திரும்பி வரவில்லை. அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.
மதுரையிலிருந்து செல்வி 2013 நவ13ல் ஸ்ரீவைகுண்டம் பொலிசாருக்கு பதிவு தபாலில், தனது தம்பி ஸ்ரீராமை காணவில்லை என புகார் அனுப்பினார். பொலிசார் தனிப்படை அமைத்து ஸ்ரீராமை தேடி வந்தனர். திருமணத்திற்காக வந்த ஸ்ரீராமை, இசக்கிமுத்து மணக்கரை அருகேயுள்ள தனது தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு அவருடன் இசக்கிமுத்து, சுப்பிரமணியன், ஸ்ரீகாந்த், ராஜா, சாயர்புரத்தை சேர்ந்த ராமசாமி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியபோது தகராறு ஏற்பட்டது. அவர்கள் ஸ்ரீராமை அடித்து கொலை செய்து உடலை பிளக்ஸ் பேனரில் சுருட்டி, தூக்கி வீசியது தெரியவந்தது.
பொலிசாரின் விசாரணை வளையம் நெருங்குவதை அறிந்த இசக்கிமுத்துவும், ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியனும் செங்கோட்டை நீதிமன்றில் நேற்று முன்தினம் சரணடைந்தனர். இதைதொடந்து கொலையில் ஈடுபட்ட சாயர்புரத்தை சேர்ந்த ராமசாமி வி.ஏ.ஓ சுரேஷிடம் சரணடைந்தார். தலைமறைவான ஸ்ரீகாந்த், ராஜாவை பொலிசார் தேடி வருகின்றனர்