தொழுநோயை ஒழிக்கப் போராடும் இலங்கை : ஆண்டுக்கு 2000 நோயாளிகள்!!

561

Tholu nooiஇலங்கையில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை பல தரப்பிலும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 2000 புதிய நோயாளிகள் என்ற அளவில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளது.

எனினும் ஏற்கனவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்துவந்த இடங்களிலேயே தற்போதும் இந்த அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொழு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் பிபிசி தமிழோசையிடம் கூறியது.

குறிப்பாக 2013ம் ஆண்டில் மேல்மாகாணத்திலேயே 44 வீதமான தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. அடுத்தபடியாக, 14 வீதமான நோயாளர்கள் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.



கடந்த ஆண்டு நாடெங்கிலும் பதிவான தொழு நோயாளர்களில் 177 பேர் சிறார்கள் என்று தொழு நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ தமிழோசையிடம் கூறினார்.

2020இல் ஆண்டுக்கு 1000 நோயாளிகளாக குறைப்பது அரசின் இலக்கு இந்த சிறார் நோயாளிகளில் கூடுதலானோர் வடக்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 40 சிறார்கள் கடந்த ஆண்டு தொழு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

1000க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் ஆண்டுதோறும் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் ஒன்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

இலங்கையில் தொழு நோய் ஒழிக்கப்பட்டதாக 1995ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தொழு நோய் இலங்கையில் பெரும் சுகாதாரப் பிரச்சனையாக இனிமேலும் இருக்கமுடியாது என்ற அர்த்தத்திலேயே 1995ம் ஆண்டு அறிவிப்பு வந்தது என்றும் தொழு நோயை முழுமையாக ஒழிப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ கூறினார்.

2020ம் ஆண்டில் இலங்கையில் தொழு நோயை ஒழிப்பதற்கு அரசு இலக்கு வைத்துள்ள போதிலும், தொழு நோயை முற்றாக ஒழிப்பது என்பது சந்தேகத்துக்குரியதே.

இலங்கையில் புதிதாக பதிவாகும் தொழு நோயாளிகளின் எண்ணிக்கையை 2020ல் ஆண்டுக்கு 1000 என்ற அளவுக்குள் குறைத்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே தமது நிகழ்ச்சித்திட்டம் செயற்படுவதாகவும் சுகாதார அமைச்சின் தொழு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் கூறினார்.

மைகோபக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்ற பக்டீரியா மூலம் தொற்றும் தொழு நோயின் அறிகுறிகளை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் எடுக்கலாம் என்பதே இந்த நோயை ஒழிப்பதில் உள்ள பெரிய சவால் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்களின்படி, ஆண்டுக்கு 1000க்கும் அதிகமான தொழு நோயாளர்கள் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-BBC தமிழ்-