வவுனியா மின்சார சபையில் குவிந்த மக்கள் : அதிகரித்த கட்டணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு!!

4644

மின்சார சபையில்..

வவுனியாவில் மின் பாவனையாளர்களுக்கு இரண்டு மின்சார பட்டியல் வழங்கி அதிகரித்த கட்டணம் அறவிடப்படுவதாக அங்கு இன்று (25.06.2020) வருகை தந்த பாவனையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொவிட் – 19 தாக்கம் காரணமாக நாடு முடக்கத்திற்குள் இருந்த காலப்பகுதியில் மின்சார சபையால் ஒரு மின்சார பட்டியல் வழங்கப்பட்டிருந்தது.

அதில் முன்னைய மாத மின்பட்டியல் தொகையே அடுத்த மாதத்திற்கும் போடப்பட்டிருந்தது. அதனை பலர் செலுத்தியும் விட்டதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது மீண்டும் ஒரு மின்சாரப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதில் மூன்று மாத மின்பட்டியல் எனக் கூறி அறவீடுகள் பொறிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு மாத மின்பட்டியல் தரப்பட்ட நிலையில் மீண்டும் அம் மாத்திற்கும் சேர்ந்து மின் பட்டியல் வழங்கி மின்சார சபையினர் மக்கள் பணத்தை சுரண்டுவதாகவும், இதன்காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட பிரதான மின் பொறியிலாளர் திருமதி மைதிலி தயாபரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமது மின்சார சபையால் நாடு முடக்கத்திற்குள் இருந்த காலப்பகுதியில் தற்காலிகமாக ஒரு மின்சாரப் பட்டியல் வழங்கப்பட்டது.

அதில் முன்னைய மாத மின் பட்டியலை அடிப்படையாக கொண்டு உத்தேச அறவீடே போடப்பட்டது. தற்போது மின்மானியில் உள்ளவாறு 3 மாதத்திற்கான மின் பட்டியல் வழங்கப்படுகின்றது.

அதனால் ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தேச மின் பட்டியல் பணத்தை செலுத்த தேவையில்லை. அது நீக்கப்பட்டுள்ளது. அதற்காகவே புதிய பட்டியலில் அத் தொகை இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னைய உத்தேச பட்டியலுக்கு பணம் செலுத்தியவர்களின் தொகை தற்போதைய பட்டியலில் கழிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.