பாரியளவிலான போதைப் பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்ட கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொம்பனித் தெருவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
நாட்டின் ஹெரோயின் போதைப் பொருள் அதிகரித்து விட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். பாரியளவில் போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த நபர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றுமாறு அதிமேதகு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் ஏற்படும் மாற்றத்தை அறிந்து கொள்ள முடியும். மரண தண்டனையை நிறைவேற்றினால் சில நாடுகள் இலங்கையில் மரண தண்டனை அமுலில் இருப்பதாக விமர்சனங்களை முன்வைக்கும்.
மரண தண்டனை அமுல்படுத்தி போதைப் பொருள் விற்பனை தடுத்து நிறுத்த முடியாது போனால் வேறு எந்த வழியில் அதனை நிறுத்த முடியும்.
பெரிய மனிதர்களின் பிரச்சினைகளுக்காக அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், போதைப் பொருளை பயன்படுத்தும் நபர்கள் அவர்களுக்காக குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைக்கு செல்கின்றனர்.
சிறையில் இருக்கும் அவர்களுக்கு ரகசியமான முறையில் பந்துகளில் ஹெரோயினை அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் சிறையில் ஹெரோயினை பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இவர்களை சிறைக்கு அனுப்பி நபர்கள் சிறையில் உள்ளவர்களின் குடும்பங்களை பராமரித்து வருகின்றனர். சட்டப் புத்தகத்தில் இருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாத காரணத்தினாலேயே இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன என விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.