முதலாவது திருமணத்தை மறைத்து திருட்டு திருமணம் செய்ய முயன்றவர் யாழில் கைது!!

411

Weddingஏற்கனவே திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத் தந்தையான நபர் அதை மறைத்து இரண்டாவது தடவையாகத் திருமணம் செய்ய முற்பட்ட சமயம் தாலி கட்டுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் மாட்டிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

கடைசி நேரத்தில் உண்மை தெரிய வந்ததனால் திருமணம் இடையில் நிறுத்தப்பட்டது. மணமகனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் பெண் வீட்டுக்காரர்கள்.

இந்தச் சம்பவம் யாழ். நகரை அண்மித்து கே.கே.எஸ் வீதியில் சிவலிங்கப்புளியடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தான் ஏற்கனவே திருமணம் செய்த விடயத்தை மறைத்ததுடன் மட்டுமல்லாது 5 லட்சம் ரூபா பணத்தைச் சீதனமாகப் பெற்றுக்கொண்டே இரண்டாவது தடவையாக திருமணம் செய்ய முற்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட நபர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..



சிவலிங்கப்புளியடியைச் சேர்ந்த பெண் வீட்டார் தமது மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நோக்கில் மணமகனைத் தேடியுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து அவர்களுக்கு ஒரு சாதகக் குறிப்பு கிடைத்தது.

சாதகங்கள் பொருத்தமாக இருந்ததால் இருவருக்கும் திருமணம் செய்வதற்கு பெண் வீட்டார் தீர்மானித்தனர். பெண்வீட்டார் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு எல்லாம் அறிவிக்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை திருமணத்தை நடத்த நாள் குறிக்கப்பட்டது.

மணமகன் மணவறையில் வந்து அமர்ந்தார். தாலிகட்டுவதற்குச் சில நிமிடங்களே உள்ளன. பெண்ணை அழைத்து வரவேண்டியதுதான் மிச்சம். அதற்கிடையில் எல்லாம் தலைகீழாக மாறியது.

திருமணத்துக்காக வந்திருந்திருந்த பெண் தரப்பு உறவினர் ஒருவர் அப்போதுதான் மாப்பிள்ளையை உற்றுப் பார்த்தார். மணமகனை அவருக்கு முன்னரே தெரிந்திருந்தது. அவருக்கு ஏற்கனவே திருமணமும் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது என்ற உண்மையை அவர் சபையில் போட்டுடைத்தார்.

உண்மையைக் கேட்டுக் கொதித்துப்போன பெண் வீட்டார் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்தனர். மணமகன் கோலத்திலிருந்த குடும்ஸ்தரை தமது வாகனத்தில் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை உறுதிப்படுத்தினர். விவரங்களை கிளிநொச்சியில் இருந்த அவரது மனைவிக்கு அறிவித்தனர்.

தனது குழந்தையுடன் அவரும் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு வந்தார். அவர்களிடம் இருந்தும் சந்தேக நபருக்கு எதிராகப் பொலிஸார் முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டனர்.

தான் முன்னர் பதிவுத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்த அவர், ஒரு குழந்தைக்குத் தந்தை என்பதையும் ஒப்புக் கொண்டார் என்கின்றனர் பொலிஸார்.

இதற்கிடையே இதேபோன்றதொரு சம்பவம் அச்சுவேலியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது என்றும் தெரிய வருகிறது.