நோயாளியின் உயிரைக் காக்க உதவிய தொலைக்காட்சித் தொடர்!!

493

Serialஅமெரிக்க, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொடரைப் பார்த்து ஜேர்மன் வைத்தியர்கள் நோயாளி ஒருவரைக் காப்பாற்றியுள்ளனர்.

ஜேர்மனியில் உள்ள மார்பர்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 55 வயது நபர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்கள் குறுகி இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதயம் செயல் இழக்கும் நிலையில் இருந்தது.

அதிக காய்ச்சல் மற்றும் தைராய்டு செயல் இழப்பினால் காது கேட்கும் திறனையும், கண் பார்வை திறனையும் இழந்திருந்தது தெரியவந்தது.

இதுபோன்ற நோய் தாக்கியவரையும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் 2011ல் அமெரிக்க, தொலைக்காட்சி ஒளிபரப்பிய, ஹவுஸ் என்ற மருத்துவத் தொடரில் விளக்கப்பட்டு இருந்தது.



இந்த தொடரின் அடிப்படையில் நோயாளிக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆராயப்பட்டது. ஜேர்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, கடந்த, 2010ல், அவரது இடுப்பு எலும்பு உடைந்ததால், பீங்கானால் செய்யப்பட்ட செயற்கை இடுப்பு எலும்பு பொருத்தப்பட்டு இருந்தது.

செயற்கை இடுப்பு எலும்பில் உள்ள கோபால்ட் உடைந்து வேதிமாற்றம் அடைந்து. இரத்தத்தில் கலந்து விஷமாக மாறியதால், அவருக்கு மேற்கண்ட பாதிப்புகள் ஏற்பட்டதை வைத்தியர்கள் கண்டுபிடித்தனர்.

தற்போது அந்த நோயாளிக்கு மாற்று செயற்கை இடுப்பு எலும்பு பொருத்தப்பட்ட பின் இதயத் துடிப்பு சரியானது. அமெரிக்க, தொலைக்காட்சித் தொடர்தான் இந்த நோயாளியின் உயிரை காப்பாற்ற உதவியதாக ஜேர்மன் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.