சமூக ஊடகங்களில் தனி நபர்களின் விபரங்களை பெறும் நடவடிக்கை : மக்களுக்கு எச்சரிக்கை!!

300


மக்களுக்கு எச்சரிக்கை..


சமூக ஊடகங்களில் தனி நபர்களின் விபரங்கள் சூட்சுமமாக பெறப்படும் நடவடிக்கை குறித்து இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பினை மேற்கொள்வதாக தெரிவித்து இவ்வாறு விபரங்கள் சேகரிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் மேலும் குறிப்பிடுகையில்,


தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் பங்கெடுக்குமாறும் அல்லது குழுக்களில் இணையுமாறும் சமூக ஊடகங்களில் மக்களிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன.


இதன் மூலமாக தனிநபர்களிடமிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. எனவே சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்படும் இவ்வாறான வேண்டுகோள்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கருத்துக்கணிப்புகளுக்காக வேண்டுகோள்கள் விடுக்கப்படும் போது அதற்கான நோக்கங்கள் குறித்து பொது மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இவ்வாறான முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.