நீர்கொழும்பு பிரதேசத்தில் ஐந்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் வெளிநாட்டுப் பிரஜையொருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.40 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் கட்டுவ, ஓட்டுத் தொழிற்சாலை அருகில் இடம்பெற்றதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு திசையிலிருந்து கொச்சிக்கடை திசையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி, லொறி, ஜீப், மற்றும் இரண்டு வான்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றது.
குறித்த விபத்து காரணமான ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் காயத்திற்குட்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து அனுராதபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த லொறியில் மோதியதாகவும், இதன் காரணமாக லொறி ஜீப்பில் மோதியதாகவும், இந்த வாகனங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு வான்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
நீர்கொழும்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதுடன் போக்குவரத்தை சீர்செய்தனர்.