தமிழகத்தில் சிக்கியுள்ள கர்ப்பிணிப் பெண்ணின் கண்ணீர் கோரிக்கை!!

1963

கர்ப்பிணிப் பெண்..

தமிழகம் வந்த 7 மாத இலங்கை தமிழ்ப்பெண் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவியுள்ளார்.

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி பாஸ்கர் – சந்திரமோகனா. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்தது.

இதையடுத்து, செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காகக் கடந்த டிசம்பர் மாதம் தாய் காந்திமதியுடன், சந்திரமோகனாவும் பாஸ்கரனும் தமிழகத்தின் கோவைக்கு வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று அதன் மூலம் சந்திரமோகனா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக சந்திமோகனாவால் சொந்த நாட்டுக்கு திரும்பமுடியவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், என் கணவர் பாஸ்கரன் கடந்த மார்ச் மாதம் இலங்கை சென்றுவிட்டார். ஆனால் நானும் என் தாயும் போதிய நிதி வசதி இல்லாமல் தவித்து வருகிறோம், 8 மாதம் கர்ப்பணியாகி விட்டால் விமானத்தில் பயணிக்க முடியாது.

எனவே, என்னை உடனடியாக தமிழக அரசும் இலங்கை அரசும் இணைந்து என்னை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் பேசியதோடு இருவரும் சொந்த நாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.