வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர் தென்னிலங்கையில் திடீரென மரணம் : கொரோனா என சந்தேகம்!!

802

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் கொண்டு சென்ற கப்பலில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

டக் இயந்திரத்தில் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட போது குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டுபாய் துறைமுகத்தில் இருந்து தாய்வான் நோக்கி பயணித்த இந்த கப்பலின் மூன்றாம் அதிகாரியே இவ்வாறு திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், பிலிப்பைன்ஸ் நாட்டவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.

கப்பலில் இருந்த நோயாளியை காலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளார். அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக காலி துறைமுக பகுதிக்கு அம்பியுலன்ஸ் வண்டி ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த பிலிப்பைன்ஸ் நாட்டவர் 52 வயதுடையவர் எனவும் கடுமையான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த வெளிநாட்டவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வந்த அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பீசீஆர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய உயிரிழந்த நபரின் சடலம் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு செல்லப்பட்டுள்ளது.