சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் உயர் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே ஸ்ரீநீதி கருமாரியம்மன் கோவில் உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவர் குணமடைய வேண்டும் என்று இந்த கோவில் கட்டப்பட்டது.
இந்த கோவில் நடைபாதையில் உள்ளதாகவும், இதை இடிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த கோவிலை இடிப்பதற்கு சென்னை மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. ஆனால் இந்த கோவில் இடிக்கப்படவில்லை.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிராபிக் ராமசாமி தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னி ஹோத்ரி, கே.கே.சசிதரண் ஆகியோர் கோவிலை புதன்கிழமை (இன்று) மதியம் 2 மணிக்குள் இடிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து தமிழக அட்வகேட் ஜெனரல் சோமயாஜி இன்று நீதிபதிகள் முன்பு ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பொது இடங்களில் உள்ள கோவில் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் இந்த கோவிலை இடிக்க கால அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கோவிலை இடிக்க வேண்டும் என்கிற தங்களது உத்தரவை அமுல்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சிக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
இதற்கிடையே எம்.ஜி.ஆர் நினைவாக கட்டப்பட்ட கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் இன்று கோவில் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.