வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் பலி!!

1413

ரட்ணசிங்கம்..

வவுனியா கண்டி வீதியில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனம், வவுனியாவில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டையிழந்து அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துகொண்டிருந்த முதியவருடன் மோதி வீதி கரையில் இருந்த உயர் அழுத்த மின்சார தூணுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் உயர் அழுத்த மின்சார தூண் முழுமையாக சேதமடைந்த நிலையில் வாகனத்தின் மீது சரிந்து விழுந்தது. எனினும் உடனடியாக விரைந்து வந்த மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பொலிஸாரின் செயற்பாட்டால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருந்தது.

குறித்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ரட்ணசிங்கம் எனும் 59 வயதுடைய முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்தி 28.06.2020 : வவுனியா கண்டி வீதியில் கோர விபத்து : ஒருவர் படுகாயம்!!

வவுனியா, கண்டிவீதியில் சிறிய ஹன்ரர் ரக வாகனமும், துவிச்சர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று(28.06.2020) காலை வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றது. இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிசென்ற சிறிய ஹன்ரர் ரக வாகனம், வவுனியாவில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்த போது,

அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த உயர் அழுத்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் உயர் அழுத்த மின்சார கம்பம் முழுமையாக சேதமடைந்த நிலையில் வாகனத்தில் மீது முறிந்து விழுந்தது. பொலிசார் அறிவித்ததைத் தொடர்ந்து உடனடியாக விரைந்து செயற்பட்ட மின்சார சபை ஊழியர்கள்,

அப் பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்ததுடன், வாகனம் தீப்பற்றி எரியாத வகையில் நீர்தாங்கி மூலம் பொலிசாரால் தண்ணீரும் விசிறப்பட்டது. இதன் மூலம் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மகேஸ்வரன் ரட்ணசிங்கம் (வயது 59) என்ற முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.