பங்களாதேஷூக்கு எதிரான முதலாவது 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், இரண்டு 20க்கு இருபது போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
முன்னதாக நிறைவடைந்த டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20க்கு இருபது போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 64 ஓட்டங்களையும் குலசேகர 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து 169 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாங்களாதேஷ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 166 மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இலங்கை 1-0 என முன்னிலையில் உள்ளது.