நாய்க் குட்டிகளில் ஏற்படும் பார்வோ [Parvo] எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் தடுப்பு முறையும்!!

1457

வவுனியா உட்பட இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய நாட்களில் வளர்ப்பு நாய்க் குட்டிகளை அதிகம் பாதித்திருக்கும் ஒரு நோய் பார்வோ [parvo] எனப்படும் இரத்தக் கழிச்சல் நோய்.இது ஒரு நச்சுயிரிவைரஸ் தாக்கம் ஆகும்.பொதுவாக ஆறு கிழமை தொடக்கம் ஆறு மாதம் வரையான நாய்க்குட்டிகளை தாக்குகின்றது.

முன்பெல்லாம்அதிகம்ரோட்வெய்லர்[Rottweiler],டோபர்மான்[Doberman],ஜெர்மன்ஷெப்பெர்டு [German shepherds] போன்ற உயர் ரக நாய்க்குட்டிகளை மட்டுமே தாக்கி வந்த இந்த நோய் தற்போது உள்ளூர் நாய்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நோய் இரண்டு விதமான வகைகளை  கொண்டது.ஒன்று உணவுக் கால்வாய் சம்பந்தப் பட்டது[Gastro intestinal form].அதுதான் பொதுவான வகை. இதன் போது வாந்தி,இரத்தக் கழிச்சல் ஏற்படும்.மற்றைய வகை இதயத்துடன்  தொடர்பு பட்டது[cardiac form].குட்டிகள் மாரடைப்பு[Heart attack] ஏற்பட்டு இறக்கும்.இது மிக அரிதானது.

இலங்கையில் பொதுவாக ஏற்படும் வகை உணவுக் கால்வாய் தொடர்பான வகை.பெரும்பாலும் சரியான சிகிச்சை அளிக்கப்படாத நாய்க் குட்டிகள் மரணமடையும். கடுமையான காய்ச்சல், தொடர்ச்சியான வாந்தி, ஒரு வித துர்மணம் கொண்ட இரத்தக் கழிச்சல் என்பன இன் நோயினது முக்கிய அறிகுறிகள்.பொதுவாக நாய்க் குட்டிகள் உணவில் நாட்டம் இன்றிக் காணப்படும்.

மிக அதிகமான நீர் இழப்பு காரணமாக நாய் குட்டிகள் இறக்கும்.இதை விட நாய்க் குட்டிகளின் உணவுக் கால்வாய் சத்துகளை அகத்துறிஞ்சும் பண்பை இழந்து விடுகின்றது.இதன் காரணமாக நாய்க் குட்டிகள் மெலிந்து நலிவடைந்து இறந்து விடுகின்றன.

இந்த நோய் பொதுவாக நோயுற்ற நாய்களுடன் ஏற்படும் தொடுகை காரணமாக ஏற்படுகிறது.அத்துடன் நோயுற்ற விலங்குகளின் வாந்தி,ஏனைய கழிவுகளை உட்கொள்ளல் காரணமாகவும் ஏற்படுகிறது.மேற்படி நோய் விலங்குகளின் கழிவுகள் ,கழிவு கலந்த பொருட்கள் ,மண்,நோய் விலங்குகள் தொடர்புபட்ட பொருட்கள்  போன்றவற்றில் நோய்க் கிருமிகள் ஒரு வருடத்துக்கு அதிகம் உயிர்ப்புடன் இருக்கக்கூடியவை.

இந்த நோய் தொற்றை வெளிநாடுகளில் இரத்த பரிசோதனை,சிறு நீர் பரிசோதனை, எக்ஸ் கதிர் பரிசோதனை ,உயர் தொழில் நுட்ப நுணுக்குக் காட்டிப் பரிசோதனை ,உடலில் ஏற்படும் உடலியல் பதார்த்தங்களின்மாற்றங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்கின்றனர்.இலங்கையில் கொழும்பு கண்டிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஓரளவு மேற்படி வசதிகள் காணப்படுகின்ற போதும் அதிகமான இடங்களில் இந்த பரிசோதனைகள் விலங்கு மருத்துவத்தில் கிடையாது.எனவே அறிகுறி மருத்துவ கண்டுபிடிப்புதான்[symptomatic diagnosis] பயன்படுகிறது.இதன் போது ஏற்படும் துர் மணத்துடனான இரத்தக் கழிச்சல் இந்த நோய்க்கு தனித்துவமானது. [parvo smell] விலங்கு மருத்துவர்கள் இந்த அறிகுறிகளை இலகுவாக கண்டுபிடித்து விடுவார்கள்.பொதுவாக இந்த நோய் தொற்று குறித்த காலப்பகுதியில் பரவுகிற படியால் இவற்றை அடையாளம் காண்பது இலகு.[ கடந்த சில வருடங்களாக வவுனியா பகுதியில் மே மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை இந்த நோய் நிலையை அவதானித்துள்ளேன்.

பார்வோ வைரசால் ஏற்படுகின்ற இந்த நோய்க்கு தடுப்பூசி [vaccine] உள்ளது.இலங்கையில் பொதுவாக ஆறு கிழமை அளவில் முதலாவது ஊசியும் அதன் பின் ஒன்றரை  மாதத்தின் பின் இன்னொரு ஊசியும் பிறகு வருடம் தோறும் நினைவூட்டல் [booster] ஊசியும் போடப் படுகின்றது.

நோய்த் தொற்று ஏற்பட்ட நாய்க் குட்டிகளுக்கு இரண்டாம் நிலை பக்டீரியா தொற்றை[secondary bacterial infection] தடுக்க அன்டி பயோடிக் சிகிச்சையும் தொடர்ச்சியான நீர் இழப்பை ஈடு செய்யும் சிகிச்சையும் [Hydration therapy] மேற்கொள்ள வேண்டும்.

இத்துடன் குளுகோஸ்,பொட்டாசியம் இழப்பை ஈடு செய்யும் சிகிச்சையும் செய்ய வேண்டும்.இவை பொதுவாக நாளங்களில் ஏற்றப் படுகிறது[intra Venus].வாய் மூலம் [oral] கொடுக்கும் மருந்துகளை நாய்க் குட்டிகள் வாந்தி எடுப்பதால் அவை பயன் தராது.இந்த நோய் நாய்க் குட்டிகளின் நோயெதிர்ப்பு  சக்தியை [immunity] பாதிப்பதால் பிற்காலத்தில் வேறு பல நோய்த் தொற்றுகளுக்கு உள்ளாகக் கூடும்.எனவே குணமடையும் நாய்க் குட்டிகளுக்கு நோயெதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கும் மருந்துகளையும்,உணவுகளையும் விலங்கு மருத்துவர் ஆலோசனையின் பின் கொடுக்கலாம்.அரிதாக வளர்ந்த நாய்களிலும் இந்த தொற்று ஏற்படும்.எனினும் குட்டிகளை பாதிப்பதைப் போல் அவற்றை பாதிப்பதில்லை.

நோயுற்ற விலங்குகளை தனிமைப்படுத்தி வைத்திருத்தல் நல்லது.இல்லாது போனால் ஏனைய விலங்குகளும் தொற்றுக்கு உட்படலாம்.மேலும் நோயிலிருந்து மீளும் நாய்க் குட்டிகள் இரண்டு மூன்று மதங்களுக்கு காவிகளாக காணப்படலாம்.எனவே அவற்றை குறித்த காலத்துக்கு தனிமைப் படுத்தல் நல்லது. நோயுற்ற விலங்குகள் இருந்த இடத்தை வெளிற்றிகளை [Bleach] கொண்டு கழுவுதல் வேண்டும்.நாய்க் கூடுகளை குறித்த காலத்துக்கு சூரியஒளியில் காய விடுதல் சாலச் சிறந்தது.

முக்கியமாக சரியான இடத்தில் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுதல் பொருத்தமானது.தாமதமடையும் ஓவ்வொரு நாட்களும் நாய்க் குட்டிகளை பாதித்து விடும்.இலங்கையில் செயற்படும் சட்ட விரோத சிகிச்சையாளர்களும் இந்த நோயை பரப்புவதில் பெரும் காரண கர்த்தாக்கள். தடுப்பு மருந்துகளை தவறாக  சேமித்தல்,தடுப்பூசிகளை சரியான வழியில் போடாமை,தவறான காலத்தில் மருந்துகளை போடுதல்,வீரியம் குறைந்த தரமற்ற  மருந்துகளை தேர்ந்தெடுத்தல் போன்ற செயற்பாடுகளால் இந் நோய் வீரியமடையலாம்.எனவே இந்த நோயை பற்றியும் தடுப்பூசி பற்றியும் நோய் ஏற்பட்ட பின் சிகிச்சை பற்றியும் அந்த  சிகிச்சையை  யாரிடம் பெற வேண்டும் என்பதும் கட்டாயம்  நாய் வளர்ப்பார்கள் தெரிந்திருக்க வேண்டும்.இல்லாது போனால் உங்கள் பெறுமதியான செல்லப் பிராணிகளை இழக்க நேரிடலாம்.

ஆக்கம் 

Dr.S. கிருபானந்தகுமாரன் [MVSc]

கால்நடை வைத்தியர் 

தொடர்புகளுக்கு-0772544185/0776387870