இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தற்காலிக பணிநீக்கம்!!

390

Indian Lok Sabhaஇந்தியப் பாராளுமன்றத்தில் இன்றும் தெலுங்கானா பிரச்சினையால் கடும் அமளி ஏற்பட்டது. சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களை எதிர்த்து தெலுங்கானா எம்.பி.க்கள் பதில் கோஷம் போட்டனர்.

பயங்கர அமளி ஏற்பட்டு ஆந்திர எம்.பி.க்கள் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவான சமயத்தில் விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால், மிளகு பொடி ஸ்பிரேயை பாராளுமன்றத்தில் அடித்தார்.

இதனால் சில எம்.பி.க்களுக்கு இருமல், கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது. 3 எம்.பி.க்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சில எம்.பி.க்கள் மிளகு பொடி ஸ்பிரேக்கு பயந்து சபையில் இருந்து வெளியேறினர்.

ராஜகோபால் எம்.பி. மிளகு பொடி தூவியதுடன் கண்ணாடி டம்ளர்களையும் வீசினார். அவரை எம்.பி.க்கள் பிடித்துக் கொண்டு சூழ்ந்து நின்று தாக்கினார்கள்.



நிலைமை மோசமானதால் பாராளுமன்ற ஊழியர்களும், சபை காவலர்களும் ஓடி வந்து அவரை மீட்டனர். தெலுங்கு தேசம் எம்.பி. வேணுகோபால் ரெட்டி பாராளுமன்ற செயலாளர் மேஜையில் இருந்த மைக்கை உடைத்தார்.

இந்த மோதலுக்கு இடையே இந்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்தார். அதன்பின்னரும் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டதாக ராஜகோபால், தெலுங்கு தேசம் கட்சியின் கிறிஸ்தப்பா நிம்மலா, கொணகல்லா நாராயண ராவ், நம நாகேஸ்வர ராவ், வேணுகோபால் ரெட்டி, நரமல்லி சிவபிரசாத், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி, மேகபதி ராஜமோகன் ரெட்டி உள்ளிட்ட 16 எம்.பி.க்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது சபை விதி 347ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் 5 நாட்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்றும் சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.