வவுனியாவில் கிரவல் அகழ்வதால் குளங்களுக்கான நீர் விநியோகம் தடை!!

576

கிரவல் அகழ்வதால்..

வவுனியா – கண்ணாட்டி,கணேசபுரம் பகுதியில் கிரவல் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருவதால் அப்பகுதியை சூழவுள்ள விவசாயம் மேற்கொள்ளும் நான்கு குளங்களுக்கு செல்ல வேண்டிய நீரேந்துப்பகுதிகளுக்கு தண்ணி செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயம் செய்கை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும், கிரவல் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இடங்களில் தண்ணி நிரம்பியுள்ளதென்று இன்று அப்பகுதிக்கு ஆய்வு மற்றும் கள விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த முறை சிறுபோகம் மேற்கொள்வதற்கு குளத்தில் தண்ணீர் இன்மையால் சிறுபோகச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணாட்டி,கணேசபுரம் கமக்கார அமைப்பு , கிராம அபிவிருத்திச்சங்கம் என்பன இணைந்து கடந்த மாதம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர்.

இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக இன்று அப்பகுதிக்கு சென்ற வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , கமநல அபிவிருத்தி தொழிநுட்ப அலுவலகர், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் கனியவள திணைக்கள அதிகாரிகள் குழுவினர் இணைந்து மேற்கொண்ட கள ஆய்வின் போது அப்பகுதியிலுள்ள குளங்களுக்குச் செல்ல வேண்டிய தண்ணீர் கிரவல் அகழ்வுப்பணியால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கள ஆய்வின் போது தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியிலுள்ள 300 ஏக்கர் பகுதியில் 25 தொடக்கம் 30 ஏக்கர் வரையான நிலப்பகுதிகளில் கிரவல் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்குள்ள நான்கு குளங்களுக்குச் செல்ல வேண்டிய தண்ணீருக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியிலுள்ள விசாயிகள் விவசாய நெற்செய்கைளை மேற்கொள்ள முடியவில்லையென இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட அப்பகுதி அமைப்புக்கள் கடந்த மாதம் அரசாங்க அதிபரைச் சந்தித்து தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றிணைக் கையளித்திருந்தனர்.

இதையடுத்து கள விசாரணைகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிரவல் அகழப்பட்ட குழிகள் ஊடாக கால்வாய் வெட்டி தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், தொடர்ந்தும் அப்பகுதியில் கிரவல் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்துமாறும், அமைப்புக்கள் கோரியுள்ளனர்.

குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர் கிரவல் அகழ்வுப்பணியை நிறுத்துவது எனது முடிவல்ல. இங்கு பார்வையிட்டு அறிக்கை ஒன்றிணை வழங்குமாறு அரசாங்க அதிபர் என்னிடம் பணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.