கிளிநொச்சியில் தேவைகளை பூர்த்தி செய்த பின் நீரை யாழுக்கு கொண்டு செல்லுங்கள் : பா.உ. சி.சிறிதரன்!!

525

Sritharan

யாழ்ப்பாண மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை கிளிநொச்சியில் உள்ள தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லுங்கள் என்றே சொல்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டுவர உள்ளதாகவும் அதனை கிளநொச்சி மக்கள் எதிர்ப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, இரணைமடு குளத்து நீர் கிளிநொச்சிக்கே போதாது உள்ளது.



அந் நீரினை கொண்டு இப்பொழுது 8 ஆயிரம் ஏக்கர் விவசாயமே செய்ய முடிகிறது. அதனை 16 ஆயிரம் ஏக்கராகவோ 24 ஆயிரம் ஏக்கராகவோ விவசாயம் செய்யும் அளவுக்கு தண்ணீர் சேகரித்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லாம்.

யாழ்ப்பாணத்தை பொருத்தவரை தண்ணீர் பற்றாக்குறை உண்டு என யாருமே இதுவரை கூறவில்லை. யாழ்ப்பாணத்தில் காணப்படும் நன்னீர் நிலைகளை பாதுகாத்து சீரமைத்தாலே யாழ்ப்பான தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இதுவரை ஆழமே காணப்படாத நிலாவரை கிணறு, வழுக்கையாறு மற்றும் இடியுண்டு குளம் ஆகியவற்றை புனரமைத்து நன்னீர் ஆக்கலாம். அதேபோல தொண்டமனாறு அரியாலையில் உள்ள நன்னீர் தடுப்பு சுவர்களை புனரமைப்பதன் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்கலாம்.

இவ்வாறு யாழ்ப்பாண நீர்நிலைகளை முகாமைத்துவம் செய்யாமல் யாழ்ப்பாண உணவு களஞ்சியமான கிளிநொச்சி விவசாயத்தை அழித்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கின்றார்கள்.

கிளிநொச்சியில் பாரிய தண்ணீர் பிரச்சினை உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி பிரதேசத்தில் வாழும் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு நன்னீர் இல்லை. அதேபோல கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இன்னும் சில கிராமங்களுக்கு நன்னீர் இல்லை விவசாயத்திற்கு நீர் போதாமல் உள்ளது .

அதுமட்டுமின்றி இம்முறை மழைவீழ்ச்சி போதாமையால் இரணைமடு குளத்தில் 15 அடி தண்ணீரே சேகரிக்கப்பட்டுள்ளது. இது இம்முறை சிறு போக நெற்செய்கைகே போதாது.

யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்ட பின்னர் கோடை காலத்தில் குளத்தில் நீர் இல்லாத போது பயிரா? உயிரா? என்ற பிரச்சினை உருவாகும். பின்னர் இந்தியாவில தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் உள்ளது போல இங்கும் பிரச்சினைகள் உருவாகும்

யாழ்ப்பாணத்தில் கோவில் வீதியில் மற்றும் அச்சுவேலியில் போத்தல்களில் தண்ணீர் அடைத்து விற்கும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந் நிலையில் யாழ்ப்பாணத்திற்கு நன்னீர் தட்டுப்பாடு என கூறி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டுவர முயல்கிறார்கள்.

எனவே எமது சுதேசியம் அழிக்கப்பட்டு பல்தேசியம் ஊடுருவ வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோமா என நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.