பாலு மகேந்திராவின் நிறைவேறாத ஆசை!!

930

Balumahendra

முதல் படமே கடைசிப் படமும் ஆன கொடுமையை என்னவென்று சொல்வது. பாலுமகேந்திராவுக்கு அப்படித்தான் நடந்து விட்டது. அவர் முதல் முறையாக நடிகராக நடித்த தலைமுறைகள்தான் அவரது கடைசிப் படமாகவும் அமைந்து போய் விட்டது.

தமிழ் திரை இரசிகர்களுக்கு இயக்குநர் பாலமகேந்திராவின் மரணம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. காலம் காலமாக அவரது படங்களை தவம் போல பார்த்து வந்த இரசிகர்களுக்கு அவரது மரணம் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கண்களை மூடிய அந்த மாபெரும் கலைஞனோடு,அவரது நிறைவேறாத கனவும் சேர்த்து உறங்கி விடக் கூடாது.

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இயக்குநராக மட்டுமல்லாமல், பரீட்சார்த்த முயற்சிகளை மிக அழகாக செய்த முக்கியமானவர்களில் மகேந்திராவும் ஒருவர். அவரது படங்கள் ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளலாம். அவ்வளவு இருக்கிறது அவற்றில்.



இப்படிப்பட்ட மகா கலைஞனான பாலு மகேந்திராவின் மனதில் நீங்காத ஒரு ஆசை மட்டும் கடைசி வரை நிறைவேறாமலேயே போயுள்ளது. அதுதான் திரைப்படங்களுக்கான ஒரு ஆவணக் காப்பகம் அமைப்பது.

கடந்த 3 வருடங்களாகவே இதுகுறித்துப் பேசி வந்தார் பாலு மகேந்திரா. ஆனால் அதைக் கேட்கத்தான் யாரும் இல்லாமல் போய் விட்டார்கள். எந்த பேட்டியாக இருந்தாலும் இதுகுறித்து பேசிக் கொண்டிருப்பார் பாலு மகேந்திரா.

இதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் 3 வருடமாக இது பற்றிப் பேசி வருகிறேன். ஆனால் யாரும் ஆர்வம் காட்ட மாட்டேன் என்கிறார்கள். பாதிச் செலவை அரசும், மீதிச் செலவை திரையுலகமும் ஏற்றுக் கொள்ளலாம் என்று கூட கூறினேன்.
ஆனால் யாரும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர்.

படம் செய்தோமா, ஓட்டினோமா, காசு பார்த்தோமா என்று பலரும் ஓட ஆரம்பித்து விட்டனர். இது துரதிர்ஷ்ட வசமானது. எடுத்த படத்தை ஆவணப்படுத்தி, பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

ஒரு படத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் அதை பல காலத்திற்கு பத்திரப்படுத்த முடியும். மேலும் நெகட்டிவ்களை பாதுகாக்க வேண்டும். இன்று பல அருமையான பிரமாண்டமான படங்கள் நம்மிடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், நெகட்டிவ்கள் இல்லாமல் போனதால் என்று கூறியிருந்தார் பாலு மகேந்திரா.

கோடிக்கணக்கான ரூபாயை நடிகர்களின் சம்பளத்திற்காகவும், இன்ன பிறச் செலவுகளுக்காகவும் திரைத்துறையினர் செலவழிக்கையில், அப்படத்தின் நெகட்டிவ் குறித்து அக்கறை காட்டுவதில்லையே என்றும் பாலு மகேந்திரா வருத்தம் தெரிவித்திருந்தார்.

கடைசி வரை அவரது வருத்தம் மாறவே இல்லை. அந்த வருத்தத்துடனேயே இந்த மூடுபனி இந்த உலகை விட்டு விலகியுள்ளது.