நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் உடல் திரையுலகினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இலங்கையின் மட்டக்களப்பில் 1934ம் ஆண்டில் பிறந்த தமிழரான பாலு மகேந்திராவிற்கு தற்போது வயது 74. ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
1977ம் ஆண்டு கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது.
தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது.
ஆர்ப்பாட்டமில்லாத அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார் பாலு மகேந்திரா.
சமீப நாட்களாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும் அதை வென்று தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார்.
அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா.
இந்நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். பாலுமகேந்திரா மரணம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்ப முடியாத, ஜீரணிக்க இயலாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. தமிழ் திரையுலகமே தீராத அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.