விளம்பர நிறுவனங்களை போட்டி போட வைத்த தவான்!!

574

dhawan

சர்வதேச கிரிக்கெட்டில் ஹட்ரிக் சதம் அடித்த ஷிகர் தவானை ஒப்பந்தம் செய்ய விளம்பர நிறுவனங்கள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவுக்கெதிரான மொகாலி டெஸ்டில் இந்தியாவின் ஷிகர் தவான் சதம் (187) அடித்தார்.

அடுத்து சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் தென் ஆப்ரிக்கா (114), மேற்கிந்திய தீவுகள் (102) அணிகளுக்கெதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசினார். இப்படி ஹட்ரிக் சதம் அடித்ததால் இவரது மதிப்பு உயர்ந்து விட்டது. பல்வேறு விளம்பர நிறுவனங்கள் இவரை மொடலாக ஒப்பந்தம் செய்ய துடிக்கின்றன.

வீராட் கோஹ்லி, ரோகித் சர்மா, முரளி விஜய் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ள கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பன்ட்டி சாய்தே கூறுகையில், கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஷிகர் தவான், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது தான் தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். எதிர்காலத்தில் சிறந்த வீரராக இருப்பது உறுதி. இவரை எங்கள் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருகிறோம்.

இவரது கிரிக்கெட் பயணம் அடுத்த ஆறு மாதத்தில் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஏனெனில் விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது.

இதற்குள் அவர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எங்களைத் தவிர மூன்று முதல் நான்கு நிறுவனங்கள் ஷிகர் தவானை ஒப்பந்தம் செய்து விட வேண்டும் என்று துடிக்கின்றன எனவும் கூறினார்.

ஷிகர் தவானை விட பெரியளவில் முறுக்கு மீசை வைத்திருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெர்வ் ஹியுஸ் கூறுகையில், ஷிகர் தவானின் மீசை அவரது ஆளுமைத் தன்மையை உணர்த்தலாம்.

ஆனால் வாழ்நாள் முழுவதும் இது அவருக்கு சோறு போடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப்போதுள்ள நிலையில், இவரது மீசைக்கு பணம் தர எதாவது நிறுவனங்கள் வந்தால், அதை வரவேற்க வேண்டும் என்றார்.