உன்னதமான சினிமா படைப்பாளியை இழந்துவிட்டோம் : கூட்டமைப்பின் கிளிநொச்சி பணிமனை இரங்கல்!!

546

Balumahendraதமிழ்ச் சினிமாவின் உன்னத படைப்பாளியான இயக்குநர் பாலுமகேந்திராவின் மறைவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி பணிமனை உறுப்பினர்கள் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவ்விரங்கல் செய்தியில்,

தமிழ் உணர்வாளர்களை, தியாகிகள் பலரை இந்த மண்ணுக்கு தந்த பெருமை மிகு எமது மண்ணின் மட்டக்களப்பின் கிராமமான அமிர்தகழி தந்த தனித்துவமான இந்திய திரை உலகால் முதல்நிலையில் மதிக்கப்பட்ட அல்லது இந்திய திரை உலகை வேறு திரை ஊடகங்கள் திரும்பி பார்க்கவைத்த திரை உலக மேதை இயக்குனர் பாலுமகேந்திராவின் மரணச் செய்திகேட்டு அதிர்ந்தோம்.

ஒரு ஒளிப்பதிவு கலைஞனாக தன் கலை வாழ்க்கையை தொடக்கிய இந்த கலைச்சிற்பி, ஒளிப்பதிவு, திரைக்கதை, இயக்கம் என துறைசார் நிபுணத்துவத்துடன் விரிந்து அந்த துறைமூன்றிலும் இந்திய தேசிய விருதுகளை பெற்றுக்கொண்டார் என்பதிலிருந்து அவர் சினிமாவின் பிறவி என்பதை எவரும் உணர்வார்கள்.

மட்டக்களப்பில் பிறந்த பாலுமகேந்திரா 1974ம் ஆண்டு மலையாளபடமான நெல்லு படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இது தமிழன் ஆற்றலின் பெருமை. பாலுமகேந்திரா செதுக்கிய என்றும் அழகுகெடாத சினிமா சிற்பங்களான கோகிலா, அழியாதகோலங்கள், மூடுபனி, வீடு, மூன்றாம்பிறை, நீங்கள் கேட்டவை எப்போதும் இரசிக நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் சினிமாவுக்கான வரங்கள்.

புதிய சினிமாக்காரன் படிக்கவேண்டிய புத்தகங்கள். பாலுமகேந்திரா என்ற ஈழத்து படைப்பாளியூடா பார்க்கின்றபோது அவன் வேரில் வேறுதளிர்கள் வீரியத்துடன் முளைக்காதா என்ற ஏக்கமும் எங்கள் நெஞ்சில் இருக்கின்றது.

இந்திய கலைத்தாய் யாதும் ஊரெ யாவரும் கேளீர் என்ற பண்புடன் வாரி அணைத்துக் கொண்டதற்கு இயக்குநர் பெருமை பாலுமகேந்திரா மிகச்சிறந்த உதாரணம்.

வாழ்வுக்கும் படைப்புக்கும் இடைவெளியற்று ஒரு இயற்கையான சினிமா பிறவியாக பாலுமகேந்திரா நம்மிடையே வாழ்ந்து சாதித்து மரணித்திருக்கிறார். அத்தகு நம் பெருமைக்கு கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்மைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகமான அறிவகமும் அதன் நிர்வாகிகளும் மற்றும் தமிழ் மக்களும் தமது இதய அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.