காதலர் தினம் – புதிர்களின் புகலிடம்!!

516

Valantine day

காதலர் தினம் காதலைப் புனிதப்படுத்துகிறது, உள்ளத்துக்குள் ஒளிந்து கிடக்கும் நேசத்தைப் பிரதிபலிக்க நாள்காட்டியில் தங்கத் தகடுகளால் நிரப்பப்பட்டிருக்கும் தினமே காதலர் தினம் என காதலர்கள் குதூகலிக்கின்றனர்.

காதலர் தினம் கலாச்சாரச் சீரழிவின் உச்சம். இது காதலைப் புனிதப்படுத்தி வந்த தேசத்தின் வேர்களில் விழுந்திருந்த போலித்தனமான மேலை நாட்டுக் கலாச்சார விஷம் என எதிர்ப்பாளர்கள் எதிர்க்கின்றனர்.

உணவகங்களில் உணவருந்தச் சென்றால் கூட பெப்ரவரி பதினான்காம் திகதி உங்களுக்குக் கிடைக்கும் “வேலண்டைன் ஸ்பெஷல் உணவுகள்”.

மின்னஞ்சல்களும், எஸ்.எம்.எஸ் களும் காதலர்களின் காதல் அலைவரிசையாய் மாறியிருக்கும் இன்றைய சூழலிலும் காதலர் தினத்தில் மட்டும் வாழ்த்து அட்டைகளையும், கூடவே ரோஜாப்பூக்களையும் வழங்க இளைஞர்கள் பிரியப்படுகின்றனர்.

உண்மையில் காதலர் தினம் காதலர்களுக்கானதா? அல்லது நமது கலாச்சாரத்தைச் சீரழிக்க வேண்டும் என யாரேனும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்களா ? இன்னும் கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால் இதன் பின்னணியில் உறைந்து கிடக்கும் உண்மைகள் முகம் காட்டுகின்றன.

வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக முதலாளிகளால் உருவாக்கப்பட்டவை அல்லது பிரபலப் படுத்தப் பட்டவை தான் இந்த தினங்கள் என்பதே முதன்மையான உண்மை. அதற்காகவே இவர்கள் ஊடகங்களைக் கவர்ச்சிகரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர் தினம், மனைவியர் தினம், எதிர் வீட்டுக்காரன் தினம் என்று ஏதேதோ தினங்களை வர்த்தக வளர்ச்சிக்காக உருவாக்கி அந்தந்த தினங்களில் அந்தந்த நபர்களுக்குப் பரிசுகள் வழங்காவிடில் அது பாவம் போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் வழியாக பரப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு அதன் வெப்பத்தில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திர சாலிகள் அவர்கள்.

முதலாளிகளின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத மக்கள் தங்கள் கரன்சிகளை வாழ்த்து அட்டைகளிலும், பூங்கொத்துகளிலும், சொக்லேட் பக்கெட்களிலும் செலவிடுகையில் சத்தமில்லாமல் மில்லியன் கணக்கில் லாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள்.

நூறு ரூபாய் மதிப்புள்ள சொக்லேட்களை இதய வடிவப் பெட்டியில் வைத்து ஒரு சிவப்பு நிற ரிபனைக் கட்டி காதலர் தின சிறப்புச் சொக்லேட் எனும் பெயரில் விற்கின்றன நவீனக் கடைகள். இவற்றின் விலை ஆயிரம் ரூபாய்க்கும் மேல்.

பழைய சில காதல் பாடல்களை கவர்ச்சிகரமான காதலர் தின ஸ்பெஷல் சிடி என கடைகளில் விற்கின்றனர் நான்கு மடங்கு அதிக விலையில். நகைக்கடை, துணிக்கடைகள் எல்லாம் கேட்கவே வேண்டாம். இந்த வைர மாலையைப் போட்டால் காதல் வளரும் என்றெல்லாம் விளம்பரங்கள் சிலிர்க்க வைக்கும்.

என்னென்ன உத்திகளை உங்களால் கற்பனை செய்ய முடியுமோ அத்தனை யுத்திகளும் காதலர் தினத்தில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. நோக்கம் வியாபாரம், வியாபாரம், வியாபாரம்…

காதலர் தினம் என்னும் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய், ஏதேனும் அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள்.

நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது ஆனால் முதலாளிகள் நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம். இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் பளீரென புலப்படும்.

அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டொலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 210 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. இவையெல்லாம் காதலர் தினம் எத்தனை ஆழமாய் வேர் விட்டு விரிவாய் கிளை பரப்பியிருக்கின்றன என்பதற்கான ஒரு சோறு பதம் மட்டுமே.

காதலர் தினத்தன்று தனக்கு ஒரு காதலனோ காதலியோ இல்லை என்று மற்றவர்கள் அறிந்து கொள்வதே அவமானம் என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். எப்படியாவது ஒரு இணையைப் பிடித்து வாழ்த்துத் தெரிவிப்பதே மரியாதைக்குரியது எனும் எண்ணத்தை ஊக்குவிக்கவே ஊடகங்களும், காதலர் தினம் போன்ற விழாக்களும் உதவுகின்றன.

காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கும் இன்று பரவி வருகிறது. தாய்லாந்தில் காதலர் தினத்தன்று திருமணப் பதிவு அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. காதலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடாவிடில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.

நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல், மெய்யின் கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது. இன்றைய திரைப்படங்கள் சித்தரிக்கும் கவர்ச்சிப் பணியே காதலென்று கற்றுக் கொள்ளும் இளவயதினர் ஆழமான திருமண உறவுகளின் மீதான கலாச்சார வேர்களை கத்தரிக்கவும் துணிந்து விடுவது தான் வேதனை.

டிஸ்கோதே, இரவு உணவக விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு குத்தகைக்கு விட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் காளான்கள் போல சடுதியில் தோன்றி மறைவனவாக உள்ளன என்பதும் காதலை இளைய சமூகத்தினர் இன்னும் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை. “பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து “ கம்ப ராமாயணத்தில் கம்பரின் கவித்துவம் கவியும் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகூட்டுவதாய் விளங்குகிறது. காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது.

அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் மலர்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

தனக்குக் காதலி இருப்பதைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவும், பழைய காதலர்கள் தங்கள் உடைந்து போன காதலை நினைத்து மதுபானக் கடைகளில் தாடி தடவவும், மற்றவர்கள் ஐயோ நமக்கு யாரும் இல்லையே என நினைத்து தனிமையில் புலம்பவும் ஒரு நாள் தேவை தானா என்பதை இளைஞர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

வாழ்த்து அட்டைகள், பரிசுகள், பூங்கொத்துகள் என வர்த்தக வளாகத்தைச் சூடுபிடிக்கச் செய்யும் இந்த காதலர் தினம் உண்மையில் எதைத் தான் தருகிறது ?. காதலை வெளிப்படுத்தவும் கொண்டாடவும் 364 நாட்கள் வலுவற்றவையாகி ஒரே ஒரு நாள் பட்டுமே பலமுடையதாகிறதா ? காதல் என்பது மைல் கல்லா ? பயணமா ? சிந்திப்பவர்கள் கண்டடைகிறார்கள் எது தேவையானது என்பதை.