வவுனியாவில் நள்ளிரவில் ஏற்படவிருந்த அனர்த்தம் : அதிரடியாக களத்தில் இறங்கிய மின்சாரசபை!!

449

மின்சாரசபை..

வவுனியா குழுமாட்டுச் சந்தி காத்தான் கோட்டம் பகுதியில் நள்ளிரவில் இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம் மின்சாரசபையினர் அதிரடியாக செயற்பட்டமையினால் தவிர்க்கபட்டுள்ளது.

மரக்காரம்பளை வீதியூடாக குழுமாட்டுச் சந்தி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாகனம் காத்தான் கோட்டம் அம்மன் ஆலயத்திற்கு அருகே வீதியினை விட்டு விலகி வீதியின் அருகேயிருந்த அதிஉயர் வலு கொண்ட மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் அதிஉயர் வலு கொண்ட மின்சார கம்பிகள் அறுத்து தொங்கியதுடன் மின்கம்பமும் கீழே விழும் நிலையில் காணப்பட்டது. எனினும் விபத்தினை ஏற்படுத்திய வாகனம் அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளது.

அவ்விடத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் உடனடியாக இலங்கை மின்சாரசபைக்கு தகவல் வழங்கியமையினையடுத்து உடனடியாக செயற்பட்ட மின்சார சபையினர் மின்சாரத்தினை துண்டித்து நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தப்பித்து சென்ற வாகனம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி விபத்துக்குள்ளான வாகனத்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

விபத்துச் சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் இரண்டு மணிநேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உறக்கமின்றி சாரதிவாகனம் செலுத்தியமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளைலிருந்து தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.