வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா-2020

51


இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (திங்கட்கிழமை) இடம்பெறுகிறது.

நல்லூரானின் பெருந்திருவிழா கடந்த ஜுலை மாதம் 25ஆம் திகதி காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே திருவிழா இடம்பெற்று வந்தது.மேலும் 25 நாட்கள் நடைபெற்று வரும் குறித்த திருவிழாவில், 10 ஆம் நாளான ஓகஸ்ட் 3 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி சூர்யோற்சவமும் கார்த்திகை உற்சவமும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 13ஆம் திகதி கைலாச வாகனமும் மறுநாள் வெள்ளிக்கிழமை வேல் விமானத் திருவிழாவும் நேற்று சப்பரதத் திருவிழாவும் இடம்பெற்றது.


இந்த நிலையில், இன்று தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்று வருகிறது.இதனையடுத்து, நாளை தினம் 18 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த திருவிழாவில் பங்குகொள்வதற்காக வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் அதிகளவானோர் வருகை தருகின்றமை வழமை.

ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் பங்கேற்பு இருக்காது என்றே கூறப்படுகின்றது.இதேநேரம் தற்போது கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்தில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன். பக்கத்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலயத் தேர் உற்சவத்துக்குப் பெருமளவில் மக்கள் வருவதைத் தவிர்த்து வீட்டில் இருந்து முருகக் கடவுளைத் தரிசியுங்கள் என யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.