டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது ஏன்?

595

Kejriwalடெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனதை அடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என்ற டெல்லி துணை நிலை ஆளுநரின் அறிவுரையை மீறி, டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை முதல்வர் தாக்கல் செய்ய முற்பட்டார்.

இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கிடையே மசோதாவை டெல்லி முதலைச்சர் தாக்கல் செய்தார் . எனினும் தொடர்ந்து அமளி நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டபேரவை மீண்டும் கூடிய உடன் மசோதாவை தாக்கல் செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கோரியதை அடுத்து எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக ஆம் ஆத்மியைச் சேர்ந்த 27 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

மீதம் 42 உறுப்பினர்கள் இந்த மசோதாவை தாக்கல் செய்ய கூடாது என்று வாக்களித்திருந்தனர். 42 உறுப்பினர்கள் எதிர்ப்பதால் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்று டெல்லி சட்டபேரவைத் தலைவர் எம்.எஸ். திர் தெரிவித்தார்.

ஜன் லோக்பால் மசோதாவின் கீழ் முதல்வர் பதவியை வகிப்பவர் முதல், நான்காம் பிரிவு அரசு ஊழியர்கள் வரை எவரேனும் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜன் லோக்பால் மசோதா விவகாரத்தில் எத்தகைய எல்லைக்கும் செல்லத் தயார் என்று முன்னதாக கூறியிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் தான் பதவியை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28 திகதியிலிருந்து டெல்லி முதல்வர் பதவி வகித்து வரும் அர்விந்த கெஜ்ரிவால், தனது ராஜினாமா கடிதத்தை டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.