முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 3 பேர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, யுக்முத் சவுத்திரி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார் லூத்ரா வாதாடினார்.
இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
வீரப்பன் கூட்டாளிகள் வழக்கில், ஜனாதிபதி காலதாமதமாக முடிவு எடுத்ததால் தண்டனையை குறைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியிருந்தது.
அதன் அடிப்படையில் ராஜீவ் கொலையாளிகளுக்கும் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.





